பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 43


வாலிபர்கள் ஒரு நடிக–நடிகையைக் குறிப்பிட்டார்கள். செய்தி, அருணாசலத்தின் காதுக்கு அடிபட்டபோது, அவர் மகளைப் பார்த்து “நீ காலேஜுக்குப் போகணு மாம்மா?” என்றார்.

காலேஜ் நிற்கவில்லை. அவள் நின்றாள்.

ஊராரின் ஊதாரித்தனமான பேச்சால் அவள் மனதிலும் ஒரு புள்ளி விழுந்தது. அந்தப் புள்ளியில் வெங்கடேசன் எப்போதாவது, சின்னதாக வருவான். அவனிடம் தனியாகப் பேசுவதுபோல் கற்பனை செய்தாளே தவிர, பேசவில்லை.

இரண்டு மூன்று ஆண்டுகள் வெங்கடேசனை அப்பப்போ நினைத்துக்கொண்டும், தந்தைக்குப் பணி விடை செய்தும், அவள் காலத்தைக் களித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று குமரேசன் பெண் கேட்டார். அருணாசலம் கொடுக்க மறுத்தார். மணிமேகலைக்கு, தன்னை யாரோ தனிக்காட்டில் தனியாக விட்டிருப்பது போல் தோன்றியது. ஒரு ‘பாட்டியை’ அப்பாவிடம் ‘தூது’ அனுப்பலாம் என்று அவள் நினைத்தபோது “நான் படிக்காதவன்னு குமரேச மாமா... அவரு பொண்ண எனக்குக் கேட்டபோது சாக்குப் போக்குச் சொல்லிட்டார். இப்போ நான் மட்டும் என் தங்கச்சிய அவரு மவனுக்கு எப்படிக் கொடுப்பேன்” என்று அண்ணன்காரன் சொல்வதும், “ஓ அவரு மவள நினைச்சிக்கிட்டு இருந்தீரா? அதான பாத்தேன். அதனாலதான் கட்டுன பொண்டாட்டிகிட்ட பேசுறதுக்கு ஒமக்கு கசக்கு” என்று அண்ணி சொல்வதும் அவளுக்குக் கேட்டது.

மணிமேகலை ஒரு முடிவுக்கு வந்தாள்.

அவள் அண்ணன் கொஞ்சம் மக்குதான். என்றாலும் ரோஷக்காரன். மனதார விரும்பிய ஒரு பெண் கிடைக்க-