பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இல்லம்தோறும் இதயங்கள் ★ 44


வில்லை என்றால், விரும்பிய மனம் என்ன பாடுபடும் என்பதை அவளே அனுபவித்து வரும்போது, வெந்த புண்வேல்போல் வெங்கடேசனை மணந்து அண்ணனைச் சிறுமைப்படுத்த அவள் விரும்பவில்லை. அவளுக்கு தன் மானசீகக் காதலை விட, அண்ணனின் மானமே பெரிதாகத் தெரிந்தது. அதோடு அப்பா எது செய்தாலும் அது நன்மையில் முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையை அவள் விடவில்லை.

‘அரக்கோணம்’ ஜெயராஜூக்கு, அவள் கழுத்தை நீட்டினாள். வெங்கடேச அத்தானை மறக்க மடியுமா? என்று தனக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்த அவள், காலப்போக்கில் தானே வியக்கும் அளவுக்கு மறந்து விட்டாள். ஆனால் ஊருக்கு வரும்போதெல்லாம், அருகில் உள்ள வீட்டில் இருந்தாலும், அவளைப் பொறுத்த அளவில் தொலைவாய்ப் போன அவன் நினைப்பு, நெஞ்சில் நெருப்புக் கட்டியாவதுண்டு. அவன் தன்னால் தான் திருமணம் செய்ய மறுக்கிறான் என்று உணரும் போது ஒரு தாபம். தன்னையேதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில் ஒரு பெருமிதம். என்றாலும், மனதில் உதித்த அந்த சின்னப்புள்ளி சிறிதாகிக்கொண்டிருந்ததே தவிர, பெரிதாகவில்லை.

வீட்டுப் படிக்கட்டில் முன்னோக்கிச் சென்ற கால்களைப் படியில் தேய்த்து, பின்னோக்கி இழுத்த எண்ணங் களைத் தேய்த்துக்கொண்டே, அவள் அவனருகே போனாள்.

அவன், லேசாக சிரித்தான். அவள் இன்னொரு நாற்காலியில் உட்காருவது வரைக்கும் எழுந்து நின்றான்.

“என்னத்தான் ! பி.எல்.ல கம்ப்ளிட் பண்ணிட்டீங்களாம். ஆனால் பாவம் பெயிலாயிட்டீங்களாமே?”

“இந்தத் தோல்வி ஒரு மைனர் பெயிலுதான்.”