பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 45


“நான் அடுத்த தடவ ஊருக்கு வரும்போது ஒங்கள மாலையும் கழுத்துமா பாக்கணும்.”

“ஒருவனுக்கு ரெண்டு தடவ மால விழும். கல்யாணம் ஆகும்போது-அப்புறம் செத்தபிறகு.... நீ எதைச் சொல்ற?”

“நான் இதுநாள் வரைக்கும் சொல்லாத ஒண்ணநானே நினைச்சிப் பார்க்கவே பயந்த ஒண்ண—இப்போ சொல்றேன். நான் உங்கள விரும்புனது வாஸ்தவந்தான். உங்கள மறக்க முடியாதுன்னு மனசுக்குள்ளேயே அழுததும் உண்மைதான். ஆனால் இப்போ அந்தமாதிரி எண்ணமே வரல. இதனால உங்கள மறந்திட்டேன்னு அர்த்தமில்ல. சொல்லப்போனா அதிகமா நினைக்கேன். என் மூணு வயசுப் பையன் அடம் பிடிக்கும்போதெல்லாம், இந்த இருபத்தொன்பது வயது குழந்த ஞாபகம் வரும். நம்ம மதத்துல ஒரு சாரார், கணவன் அடுத்த ஜன்மத்துல மனைவிக்கே மகனாய்ப் பிறக்கலாமுன்னும், தகப்பன் மகளுக்கே கணவனாகப் பிறக்கலாமுன்னும் சொல்றாங்க. இது உண்மையோ பொய்யோ போகட்டும். ஆனால் இதுல ஒண்ணு தெரியுது. பாசம், எந்த ரூபத்தில வேணுமுன்னாலும் வரலாம். அது ஒரு சக்தி, சக்தியை அழிக்க முடியாது. அதேசமயம் அதை இன்னொரு விதத்துல மாற்றிடலாம். மைன்ட, சூன்யத்தில் நிற்காதுன்னு, நீங்களே காலேஜ்ல பேசியிருக்கீங்க. ஒரு கல்யாணம் பண்ணிக்கங்க. அப்புறம் என்னைமாதிரி ஆயிடுவிங்க.”

வெங்கடேசன், அவளையே உற்றுப் பார்த்தான். வாளிப்பான தேகக்கட்டில் அன்னை தெரேஸாவின் கண்களை ‘டிரான்ஸ்பிளான்ட்’ செய்துகொண்டு அவள் அங்கே வந்திருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. அவன் ரசித்த அவளின் அந்த ‘பப்பாளி நிறம்’ இப்போது மதுரை மீனாட்சியின் குங்குமம் போல் தோன்றியது.