பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ★ இல்லம்தோறும் இதயங்கள்


மணிமேகலை, மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்த போது “ஜெயராஜ்! சீக்கிரமா வாரும். எமகண்டம் வரப் போவுது” என்று அவர் மீண்டும் கூவுவதைக் கேட்டு நிற்க முடியாமல் மணிமேகலை வெளியே வந்தாள்.

“என்ன பெரியப்பா, நல்ல காரியத்துக்குத்தான் சுபகாலம் பார்க்கணும். நீங்க செய்யுற காரியத்துக்கு எதுக்கு?”

ராமபத்திரன், அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே “இது ஆம்புள விவகாரம். நீ ஒன் வேலயப் பாத்துக்கிட்டுப் போ” என்றார். இதுவரை பேசா மடந்தை மாதிரி இருந்த ஜெயராஜின் அப்பா “அவளுக்கும் இதுல பேசுறதுக்கு உரிமை உண்டு. படபடப்புல அத மறந்துடாதேயும்..” என்றார்.

மாமனார் கொடுத்த ஊக்குவிப்பால் மணிமேகலை நிதானமாக, அதே சமயம் ஆணி வைத்து அடித்ததுபோல பேசினாள்.

“இது ஆம்புள விவகாரம் மட்டுமில்ல பெரியப்பா. பொம்புள விவகாரம். ஒரு பாவமும் அறியாத பாமா வோட விவகாரம். சீதாவோட விவகாரம். இதுல பேச எனக்கு மட்டுமில்ல, அந்த பொண்ணுங்களுக்கும் உரிம உண்டு.”

ராமபத்திரனின் ஆவேசத்தை மீசை காட்டியது.

“அப்படீன்னா, என் மகள் ஒங்க எல்லாருக்கும் சேவை செய்யனுமா? அவள் கிழவியாவது வரைக்கும், ஒங்க எச்சித் தட்டக் கழுவிக்கிட்டே இருக்கணுமா? என்ன பேச்சு பேசுற? இது பேச்சா... இது பேச்சா?”

மணிமேகலை அவர் அருகே வந்தாள். அவரின் கண்களை நேராகப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

“நல்லா யோசித்துப் பாருங்க பெரியப்பா. மூணு தலைமுறைக்கு முன்னால இங்க வந்து இப்போ நல்ல