பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ★ இல்லம்தோறும் இதயங்கள்


இந்தாங்க உங்களத்தான்! இனிமேல், காரை அத்தானிடம் கொடுத்துடணும். உங்களுக்கு மோட்டார் பைக்தான். என்ன அத்தான் பேசமாட்டக்கிங்க, ஒங்களுக்கு ஏரோப் பிளேன்தான் வேணுமா?”

சங்கரன் சிரித்துக்கொண்டே பேசினான்.

“நம்ம பேக்டரி பெரிசானதும், உன்னை பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராய் போடப் போறேன்.”

“வேண்டாம். நான் எப்பவும் பேமிலி ரிலேஷன் ஆபீஸராய் இருக்கத்தான் போறேன். வேணுமுன்னால் பாமாவைப் போடுங்க. எங்க ஊர்ல, பத்து நாளையில அவளுக்குக் கடுமையான சினேகிதம்.”

மணிமேகலை, பாமாவைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

எல்லோருக்கும் நிம்மதி. சங்கரன் ‘நம்ம பேக்டரி’ என்று சொன்னபிறகு, குடும்பத்தில் பழைய உற்சாகம் பிறந்தது. எவரும் மணிமேகலையைப் பார்த்து ‘கை கொடுத்த தெய்வம்’ என்றோ ‘பிரிவினையைப் பிரித்த பிராட்டி’ என்றோ ‘வசனம்’ பேசவில்லை. அதே சமயம் ஒவ்வொருவரின் கண்களும் ஆயிரமாயிரம் வசனங்களை ‘ஒளிபரப்பின’. எழுபது வயதில், தான் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து பிரியாமல் போனதைக் கண்ட கிழவர், ‘தரநன்னா...’ என்றுகூட பாடினார்.

இரவு எட்டிப் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்தது.

படுக்கையறைக்குள் நுழைந்த மணிமேகலை, பையனை எடுத்து குட்டிக் கட்டிலில் கிடத்திவிட்டு, கணவனருகே படுத்தாள். “எப்படியோ ஒரு பிரளயத்தை தடுத்தாச்சு” என்றாள். ஜெயராஜ் சப்புக் கொட்டினான்.

“எனக்கென்னமோ அவங்க நேரத்த எதிர்பார்த்து, ஒநாய் பின்வாங்கி இருக்கது மாதிரி தெரியுது. உடைந்த கல் ஒட்டாது...”