பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 61


“நோ நோ! இந்த வீட்டுக்கு நீதான் பிரைம் மினிஸ்டர்! நீதான் எழுதணும். நாங்க வெறும் டெப்டிங்கதான்.”

“நோ... நோ... நான் பிரைம் மினிஸ்டராய் இருந்தாலும் பெண்வீட்டுக் கட்சியின் தலைவி. நான் மாட்டேன்.”

"அப்படின்னா, நம்ம ‘ஸ்பீக்கர்’ லட்சுமிய எழுதச் சொல்லு. மணிமேகலை சிறிது யோசித்தாள்.

“பேசாம நம்ம பிரஸிடெண்ட எழுதச் சொல்லலாமே? அதுதான் முறை!”

மணிமேகலை வீட்டுக்குப் பின்னால் போட்டிருந்த தோட்டத்துச் செடிகளோடு ‘பேசிக்’ கொண்டிருந்த மாமனாரிடம் ஐந்து நிமிடம் பேசிவிட்டு, முன்னறைக்கு வந்து “மாமா நிஜமாவே பிரஸிடெண்ட்தான். ‘நீ எழுது. நான் கை எழுத்துப் போடுறேன்’ என்கிறாரு” என்றாள்.

எல்லோரும் சிரித்தார்கள்—பாமாவைத் தவிர. அவள் நாணிக் கோணி நளினப்பட்டு நின்றாள். இந்தச் சமயத்தில் சமையலறைக்குள் நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டே, நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த லட்சுமி அங்கே திடீர் பிரவேசம் செய்து “இந்த நல்ல நாள் கொண்டாட வேண்டாமா? பேசாம மெட்ராஸ் போய், எக்ஸிபிஷன் பார்த்துட்டு வரலாம்” என்றாள்.

ஜெயராஜ் உதட்டைக் கடித்தபோது சங்கரன் முகத்தைச் சுழித்தான்—லட்சுமி ஏதோ பேசக்கூடாததைப் பேசுவதுபோல. மணிமேகலை இப்போதும் பேசினாள்.

“அக்கா சொல்றதுல என்ன தப்பு? ஓடாய் உழைத்து அவங்களோ, நானோ என்னத்த கண்டோம்? எங்களுக்கும் ஒரு ‘சேஞ்ச்’ வேண்டாமா? நாம நாளைக்குக் காலையில, நம்ம கார்ல போகப் போறோம்.”

உடனே குழந்தைகள் “ஓ எக்ஸிபிஷன் எக்ஸிபிஷன்” என்றார்கள். பாமாவும், சீதாவும் கண்களை உருட்டினார்-