பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 65


எல்லோரும் காரில் ஏறிக்கொண்டார்கள். பின்னால் சங்கரன், அவன் சம்சாரம், அவர்களது இரண்டு குழந்தைகள், சீதா, இந்திரா, வசந்தி, டிரைவர் இருக்கையில் ஜெயராஜ்? அதற்கு அடுத்தாற்போல் மாமியார் கிழவி. அப்புறம் மணிமேகலை. அப்புறம் சின்ன மைத்துனன் பாஸ்கரன். வண்டி புறப்படப் போகும்போது, கிழவியம்மாள் “எனக்கு காத்து வேணும். நீ இந்தப் பக்கமா உட்காரு மணி” என்றாள் மருமகளைப் பார்த்து. “நீங்களே ஒங்க மகன் பக்கத்துல இருங்க” என்று மணிமேகலை நாணிக் கொண்டே சொன்னபோது, “இவளுக்கு இன்னும் சின்னப் பொண்ணுன்னு நினைப்பு” என்றான் ஜெயராஜ். வசந்தி அவனைத் தலையை கவிழ்த்துக்கொண்டே பார்த்தாள்.

அந்தப் பார்வை தாங்கமாட்டாது கார் புறப்பட்டது. கிழவர் பெருமிதமாகக் காரைப் பார்த்துவிட்டு, அந்தக் காலத்து ரயில் சிக்னல் மாதிரி கையைத் தூக்கிக் கீழே போட்டார்.

எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, இம்பாலாவில் சாப்பிட்டுவிட்டு ஸ்நேக் பார்க்கைப் பார்த்துவிட்டு, அவர்கள் பீச் ரோடு வழியாக பொருட்காட்சிக்கு வந்தார்கள். பல அரசு நிறுவனங்கள், இலாக்காக்கள், தனியார் கம்பெனிகள் முதலியவை வைத்தருந்த ‘ஸ்டால்களை’ பார்த்துக்கொண்டே வந்தவர்கள் ‘வாலன்டரி ஹெல்த் அஸோஸியேஷன்’ என்ற சமூக ஸ்தாபனம் போட்டிருந்த ஸ்டாலுக்கு முன்னால் வந்தபோது, ஒரு போர்டில் ‘இங்கே வைத்திய பரிசோதனை செய்து கொள்ளலாம். கட்டணம் மூன்று ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை, பியூஸிக்காரியான சீதா படித்து முடித்துவிட்டு “அண்ணி! எனக்கு அடிக்கடி தலை சுத்துது! செக்கப் பண்ணிக் கட்டுமா?” என்றாள். உடனே ஜெயராஜ் “ஒனக்கு வீட்டு வேலைய செய்யச் சொல்லும்போதுதான் தலை சுத்தும்?”