பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 67


லேசான அறிகுறி மாதிரி தெரியுது! ரொம்ப மைனர்தான். எதுக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரில செக்கப் பண்றது நல்லது. அப்படியே இருந்தாலும் எர்லி ஸ்டேஜ்தான். நத்திங் டு ஒர்ரி!”

ஜெயராஜ் பதறினான். மணிமேகலையின் தோளை ஆதரவாகப் பிடித்துக்கொண்டே, “டாக்டர், நல்லாத்தான் பார்த்துச் சொல்றிங்களா?” என்றான்.

"ஒரு டாக்டர், பேஷியண்ட்கிட்ட கொஞ்சம் மறைத் தாலும் மறைக்கலாமே தவிர, எக்ஸாஜிரேட் பண்ண மாட்டார்.”

“டாக்டர் ! டாக்டர் ! அப்படின்னா. இவளுக்கு அதுவேதானா? அதுவேதானா?”

“நிச்சயமாய் சொல்ல முடியாது. நாளைக்கு ஜிஹெச்ல செக்கப் பண்ணுங்க.. டோண்ட் ஒர்ரி எங்மேன்” என்றாள்.

மணிமேகலை வெறித்த பார்வையோடு எழுந்தாள். பிறகு கணவனைப் பார்த்தாள். அவனோ, அவளிடம் ஆறுதல் கேட்பவன் போல் மருட்சியுடன் பார்த்தான். சிறிதுநேர மெளனத்திற்குப் பிறகு, அவன் “இப்போ அவங்ககிட்ட ஒண்ணும் சொல்லாண்டாம். நாளைக்கு செக்கப் செய்த பிறகு பார்க்கலாம்” என்றான்.

இருவரும், அவர்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, சங்கரனால் ஸ்டாலுக்கு அனுப்பப்பட்டிருந்த வசந்தி, அவர்களிடம் ‘குஷ்ட ரோகம்... குஷ்ட ரோகம்’ என்று சொல்வது இருவருக்கும் கேட்டது. கேட்கக்கூடாத அளவிற்குக் கேட்டது.

இருவரும் அவர்களை நெருங்கினார்கள். உட்கார்ந்திருந்த அவர்கள் ஒன்றாக ஒரே சமயத்தில் எழுந்தார்கள்.