பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லம்தோறும் இதயங்கள்....

1

தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது அவர்களை வரவேற்பதற்காகவோ அல்லது வருவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதாலோ வந்தவர்களாய், தூத்துக்குடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமா என்று ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம். பட்டி தொட்டி பதினாறுக்கும் ‘டவுன் சக்கரவர்த்தியான’ தூத்துக்குடி நகருக்குள் பிரவேசித்த அந்த எக்ஸ்பிரஸ்—மணியாச்சியில் இருந்து ‘மீளவிட்டான்’ ஊர்வரைக்கும், கட்டை வண்டிபோல் வந்த அந்த நெட்டை ரயில், இடையே முந்நூறு கிலோமீட்டர் இருப்பதுபோலவும், அதை மூன்று நிமிடங்களில் கடக்க வேண்டும் என்பதுபோல ‘டகா டகா’ சத்தத்துடன், தலைவிரி கோலமாக வந்து நின்றது.

ரயில் நின்றாலும், அதன் ஊளை நிற்கவில்லை. ‘விருந்தாளிகளைக் கொண்டு வந்திருக்கேன். நீங்க என்ன பாடெல்லாம் படப்போறீகளோ’ என்று உள்ளூர் உறவுக்காரர்களைப் பார்த்து விசாரிப்பதுபோல் இருந்தது அந்த ஊளை.

பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர், கண்களைப் பேயாய் அலையவிட்டு,