பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 69


விட்டது. ஜெயராஜ் எதையோ பேசப் போனான். அவளோ, எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சவேரா’ ஹோட்டலில் அறை எடுத்தார்கள். ஜெயராஜ் ஆறதல் சொன்னான்.

“கவலப்படாத! இது வெறும் ஸ்கின் டிஸ்ஸிஸாத்தான் இருக்கும். இது நமக்கேன் வரப்போவுது? ஓ மை காட்!”

மணிமேகலை எதுவுமே பேசவில்லை. “எனக்கு இருக்காது... எனக்கு இருக்காது...” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே, அருகே படுத்திருந்த கணவனின் கையை எடுத்து, தன் தலைக்குக் கீழே வைத்துக் கொண்டாள்.

அவன் தூங்குவதுபோல் அசந்தபோது, அவள் எழுந்து உட்காருவது, அவள் அசந்ததுபோல் தூங்கும்போது, அவன் எழுந்து உட்காருவதுமாக இரவுப் பொழுது இருவரும் தூங்காமலே கழிந்தது.

காலையில் ஏழு மணிக்கெல்லாம் இருவரும் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள். ஜெயராஜுக்கு பல டாக்டர் நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு டெலிபோன் செய்யலாமா என்று முதலில் நினைத்தான். மணிமேகலை அதைத் தடுத்துவிட்டாள்.

‘லெப்ரஸி’ வார்டில், அந்த நோயாளிகளைப் போல் ஒரு சில உறுப்புகளை இழந்து கிடந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள். அங்கே இருந்த நோயாளிகளைப் பார்க்கப் பார்க்க—எந்தப் பாவமும் அறியாதவர்கள் போலவும், எந்த இன்பத்தையும் நுகராதவர்கள் போலவும் இருந்த அந்த ஏழை—எளியவர்கள்மீது மணிமேகலைக்கு அனுதாபம் ஏற்பட ஏற்பட, அவள் தன் சுய அனுதாபத்தைக் குறைத்துக்கொண்டாள். தான் தனிமைப்படவில்லை என்று உணர்ந்து கொண்டாள். அதே சமயம்