பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 ★ இல்லம்தோறும் இதயங்கள்


இருவரும், சவேரா ஹோட்டலுக்கு வந்தார்கள். விடிந்ததில் இருந்து பச்சைத் தண்ணிகட குடிக்கவில்லை. ‘எனக்கா? எனக்கா?’ என்று தன்னுள் எண்ணத்தை மோத விட்டு, ‘எனக்குத்தான்... எனக்குத்தான்’ என்று அந்த எண்ணம் கொடுத்த எதிரொலியை இதயத்தில் வாங்கி அதை வாய்மொழிப் பெருமூச்சாக ஆவியாக்கி, தன்னையே அடக்கிக்கொண்டு மணிமேகலை அறைக்குள் வந்தாள்.

அதற்குமேல், அவளால் தாளமுடியவில்லை. தாங்க இயலவில்லை. கண்ணிர் தானாகப் பெருகியது. உள்ளத்தின் ஓலம் விம்மலாக வெடித்தது. தன்னையே அனுதாபமாகப் பார்த்த கணவனின் தோளில் முகம் சாய்த்து, “அத்தான்... அத்தான். என்னைக் கைவிட மாட்டீங்களே, கைவிட மாட்டீங்களே” என்று பல தடவை சொல்லியவாறு அவன் முதுகை அழுந்தப் பற்றினாள். குழந்தை மாதிரி அவன் கைகளை, தன் ஆடும் கைகளால் பிடித்துக் கொண்டாள்.

ஜெயராஜ், அவளை ஆதரவோடு அனைத்துக் கொண்டான். பிறகு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தன் கண்களையும் துடைத்துக் கொண்டான்.

‘கண பட்டு போச்சு’ என்பதுபோல், இருவர் கண்களும் நீரிழந்த நிலம்போல, வெறுமையாக இமைகளை அடித்துக்கொண்டன.

7

ரு வார காலம் ஓடியிருக்கும்.

மணிமேகலை—பொருட்காட்சி பார்ப்பதற்காக அனைவரையும் அழைத்துச் சென்ற அவள், தன்னையே தானாகப் பார்த்துக் கொண்டாள். இப்போது உலகமே