பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 73


வேறுவிதத்தில்—சிலசமயம் தலைகீழாகத் தெரிந்தது. வீட்டுக்குப் பின்னாலும், முன்னாலும் உள்ள பசுமையான மரங்களைப் பார்த்து ரசிக்கும் அவள் கண்களில் இப்போது பட்ட மரங்களே பட்டன. அணில்கள் ஓடிய இடங்களில் ஓணான்களைத்தான் பார்த்தாள். வீட்டில் மொஸாயிக் தரையில் எங்கே கரை படிந்திருக்கிறது என்று கண்டு, அதை ஈரத்துணியினால் துடைக்கும் அவள், இப்போது வெளியே உள்ள தெருவில் உள்ள குண்டுக் குழிகளைத்தான் உற்றுப் பார்த்தாள். முனிஸிபாலிட்டியின் அதிகாலை சங்கு முழங்கியதும், உடனே எழுந்து வீட்டுக் காரியங்களை கவனிக்கத் துவங்கும் அவள் இப்போது அந்த ஓசையையே இழவுச் சங்காக நினைத்தாள். அருகே படுத்திருக்கும் கணவன், தொலைதூரத்தில் இருப்பது போலவும், தொலை தூரத்தில் உள்ள தந்தை அருகே இருப்பது போலவும் தோன்றியது.

என்றாலும், சும்மா சொல்லக்கூடாது, எல்லோருமே அவள்மீது அன்பைப் பொழிந்தார்கள். அவள்மீது, முன்பெல்லாம் லேசாகப் பொறாமைப்படும் லட்சுமிகடிட அவளை எந்த வேலையும் செய்யக்கூடாது என்று தடுத்தாள். மாமனார் அவளை அனுதாபத்துடன் பார்ப்பதுடன், வெளியே போய்விட்டு வரும்போதெல்லாம் முதலில் அவளைப் பார்த்து ‘எப்படிம்மா இருக்கே’ என்று சொல்லிக்கொண்டேதான் வீட்டுக்குள் நுழைகிறார். எப்போது பார்த்தாலும் ஸ்பேனர்களை எடுத்து வரும் அவன், இப்போது மல்லிகைப் பூ வாங்கி வருகிறான். சென்னையில் இருந்து வந்ததும், செய்தி ஊர்ஜிதம் ஆனதும் அதிகமாய்த் துடித்தவர்கள் குடும்பத்தினர்தான். நாலைந்து நாட்கள் வரை அந்த வீடே இழவாகி இருந்தது. எதையாவது பேசி, அந்தப் பேச்சில் எப்படியாவது சந்திரனை இணைத்துவிடும் பாமாகூட, இப்போது அவளைப் பற்றிய உள் விவரத்தைப் பேசுவதில்லை.