பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 83


கவிழ்க்கும் அவன் இப்போது முறுவலிக்காமலே எழுந்து என்னவென்று கேட்காமலே, உடையணிந்து புறப்டப் போனான். அவனிடம் நடந்ததைக் கூறி, முடியுமானால், கணவனுடன் சொத்தைப் பிரிக்காமலே தனியாக இருக்கலாம் என்று யோசனை சொல்வதற்காக, அவள் நெஞ்சுக்குள் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் புறப்படப் போனபோது "ஓங்களத்தான் ! ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள் ஜெயராஜ் அதைவிட முக்கியமான விவகாரத்திற்குப் போகப் போகிறவன்போல், இரண்டு கன்னங்களையும் 'டென்ஷனாக' உப்பிக்கொண்டே "அப்புறமாய் பேசலாம். இப்போ பேக்டரிக்கு அவசரமாய் போகணும்" என்றபோது, அவள் "ஐ அம் ஸாரி” என்றாள். இரண்டு நிமிட இடை வேளைக்குப் பிறகு இன்னும் மோட்டார் பைக் ஸ்டார்ட் ஆன சத்தம் கேட்கவில்லையே' என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது வரவேற்பு அறையில் இன்னொரு சத்தங் கேட்டது. லட்சுமியின் தங்கை வசந்தி வந்திருக்காள் போலும். அவளும் கணவனும் பேசுவது நன்றாகக் கேட்டது. மற்றவர்கள் பேசுவதும் தெளிவாகக் கேட்டது.

"வசந்தி! நீ புறப்படுகிற சமயத்துல எதிர்ல வந்திருக்கே. இன்னைய ஈவினிங் எப்படிக் கழியுதுன்னு பார்க்கலாம்."

வசந்தி கவிழ்ப்புப் பார்வையுடனேயே பேசினாள்.

"எங்கப்பா எந்த நோயும் இல்லாம ஏன் ஹெல்தியாய் இருக்கார் தெரியுமா? சொல்லுங்க பார்க்கலாம்."

"சொன்னால் பார்க்க முடியாது. கேட்கத்தான் முடியும். நீயே சொல்லு பார்க்கலாம்."

"நீங்களே பார்க்கலாமுன்னுதானே சொல்றிங்க."