பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 ★ இல்லம்தோறும் இதயங்கள்


“ஓ! இப்பதான் எனக்குப் புரியுது. ஏய்... என் தம்பி... ஒன் தங்கச்சிய எங்கேயும் கொண்டு போயிட மாட்டான். வீட் லதான் விட்டிருப்பான். நீ ‘செக்’ பண்ண வேண்டியதில்ல.”

“ஓங்களுக்கென்ன பைத்தியமா?... அத்தை மகன் பாடு... மாமா மகள் பாடு. நான் அப்பாவ அவசரமா பார்த்தா கணும். பெத்தவருக்குத்தான் தெரியும் பிள்ளை அருமை.”

இப்போது கிழவி இடைமறித்தாள்.

“கொண்டுதான் விட்டுடேண்டா. அவள் இந்த வீட்ல கால் வச்சபிறகு வாங்கின காரு இது. அவளுக்கில்லாத காரா?”

சங்கரனும், லட்சுமியும் காரில் போனார்கள். மணிமேகலை பதைபதைத்தாள். லட்சுமி அப்பாக்காரரிடம், தன் உதட்டுப்பக்கம் புள்ளி இருப்பதாகச் சொல்லப் போகிறாள். அந்த மனிதர் இங்கே வந்து குதிக்கப் போகிறார். பாகப் பிரிவினையைத் தடுத்த தன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டுவது போல பேசப்போகிறார்.

ராமபத்திரன் வருவாரே என்ற எண்ணத்தை அவள் வலுக்கட்டாயமாக விலக்கும்போது, வசந்தி கணவனுடன் சேர்ந்து போன நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இது போனால் அது... அது போனால் இது...

மணிமேகலை, இன்னும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையே பார்த்தாள். ஏனோ, அவனை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவனை ‘என் ராசா... ஒன்னத்தான்’ என்று சொல்லி தட்டியெழுப்பினாள். அப்படியும் தூங்கிய குழந்தையை வாரியெடுத்து, தோளோடு சேர்த்து எடுத்துக்கொண்டே வெளியே வந்தாள்.