பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ★ இல்லம்தோறும் இதயங்கள்


வருவதற்கு ஒரு வாரம் ஆகுமாம். மகள் வசந்திக்கு, அங்கே ஒரு வரன் இருக்காம். பையனைப் பார்த்துவிட்டு, அல்லது அவனைப் பார்க்க முடியாவிட்டாலும் பெரிய காரிய மில்லை, அவன் சொத்துச் சுகங்களைக் கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரப் போகிறாராம். ஆக ஆசாமி, இப்போதைக்கு வரமாட்டார். அவர் லட்சியம்—போன காரியம்—வெற்றி பெற வேண்டும். மோட்டார் பைக்கின் பின்ஸிட் காலியாக இருக்க வேண்டும்.

மணிமேகலை, சந்தோஷத்தில் தன் குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்தாள். வெளியே விளையாடிக் கொண்டிருந்த ரமாவைப் பார்த்து “வா, பாடம் படிக்கலாம்” என்றாள். ரமாவுக்குப் பதிலாக லட்சுமி ‘புரக்ஸி’ அட்டெண்ட்டென்ஸ் கொடுத்தாள்.

“அவள் விளையாடட்டும். விளையாடுற பிள்ளய கெடுக்காண்டாம்.”

அந்தச் சமயத்தில், அந்த வார்த்தை பெரிதாகத் தெரியவில்லை. கணவன் வந்ததும் லட்சுமி ‘புள்ளி’ போடுவதை பக்குவமாகச் சொல்லி, தனியாக ஒரு வீடு பார்த்து இருக்க வேண்டும். டாக்டர் சொல்லியும், சந்தேகப்படும் இவர்களுக்கு ஒரு மெண்டல் ட்ரீட்மெண்ட் தேவை. அவர்களுக்கு மனநோய் வந்திடக் கூடாது. அதற்கு மருந்து கணவனுடன் விலகியிருப்பதுதான்.

ஜெயராஜ், இரவு பத்து மணிக்கு வந்தான். அயர்ந்து படுத்துக் கிடந்த மணிமேகலையை எழுப்பினான். அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. என்னதான் இருந்தாலும் கட்டிய கணவனாச்சே அடியே வசந்தி! இங்க பாருடி! இப்போ என்னடி சொல்ற?

தாங்கள் பேசுவது, பிறருக்குக் கேட்க வேண்டாம் என்பதுபோல் மணிமேகலை கதவைச் சாத்தப் போனாள். ஜெயராஜ் சாவதானமாக ஆணையிட்டான்.