பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 91


“கதவச் சாத்தாதே. இங்க ஒரே புழுக்கமாய் இருக்கு. பெட்ஷீட் வேணும். அதுக்குத்தான் ஒன்னை எழுப்பினேன். வராந்தாவுல படுக்கப் போறேன்."

ஜெயராஜ், அவள் பதிலையோ அல்லது அவளையோ எதிர்பாராததுபோல் போகப் போனான். ‘இங்கே ஜன்னல் காற்று நல்லா வருமே’ என்று சொல்லப்போன அவள், அந்த வார்த்தைகளைக் கடிப்பவள் போல் பற்களைக் கடித்தாள். மத்தியானமே ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று சொல்லியாகிவிட்டது. இப்போது பேசலாம் என்று அப்போது சொன்ன அவரே, எப்போதும் பேச விரும்பாதவர் போல போகத் துடிக்கிறார். போகட்டுமே—போனால் போகட்டுமே...

ஜெயராஜ் போய்விட்டான். அந்தச் சுவருக்கு அருகே உள்ள இடத்தில்தான் படுக்கப் போகிறான் என்றாலும், அவன் எங்கேயோ போவதுபோல் தோன்றியது. இருவருக்கும் இடையே இருப்பது ஒரே ஒரு குறுக்குச் சுவர்தான்... இதை இடித்துக் கொண்டுபோய், அவரைப் பார்க்க முடியாது. இந்த நான்கு சுவர்களுக்குள் உள்ள இடிபாடுகளுக்குள்ளேயே அவள் இருந்தாக வேண்டும்.

இவரும் மாறிவிட்டாரே. ஒருவேளை இங்கே இருந்தால் உடலுறவை கேட்பேன் என்று நினைக்கிறாரோ? இந்த நிலைமையில் ‘அதுவா’ பெரிசு? சரியாய் இரண்டு மாதம், எட்டு நாளாகிறது—இவருடன் அந்தரங்கமாய் பேசி, அந்தரங்கங்களைப் பகிர்ந்து நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக, லூப், வாசெக்டமி, நிரோத், டுபெக்டமி என்கிறார்களே... அதெல்லாம் தேவையில்லை. ஒரு பெண்ணுக்கு ‘அந்த’ வியாதி வந்திருப்பதாய் சொல்லிட்டால் போதுமே, அப்புறம் ஜனத்தொகை தாராளமாய் குறையுமே. இது ஏன் இந்த சர்க்காருக்கு தெரியமாட்டக்கு எழுதிப் போடணும்...