பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ★ இல்லம்தோறும் இதயங்கள்


மணிமேகலை, தனக்குள்ளே பேசிய நகைச்சுவையை தானே கேட்டு தானே ரசித்து, தானே சிரித்து, தானே அழுதாள். தூங்கிக் கொண்டிருந்த பையனின் கால்களை எடுத்து தன் மடியில் போட்டு, அவன் கையை எடுத்து பெற்ற வயிற்றில் வைத்துக்கொண்டு அழுத்தினாள்.

வெளியே—

“பரவாயில்லயே... என் முகத்துல காலையில விழிக்கதுக்காக வந்துட்டாளே வசந்தா.”

“ஒங்க முகத்துல நான் விழிக்கதுக்காக அல்ல; என் முகத்துல நீங்க விழிக்கதுக்கு.”

“அப்படின்னா, என் ஹெல்த்தைப் பற்றி நான் பயப்படாண்டாம். ஆஹா. ஓஹோ... ஹா... ஹோ ..ஹி... ஹி...”

உள்ளேஅம்மாவின் வயிற்றோடு தன் கையை வைத்திருந்த குழந்தை, அந்த வயிற்றின் சூடு தாங்காமல் கையை எடுத்தது.

9

ரு வாரம், தவிப்பும் திகிலுமாக மணிமேகலை துடித்தாள். அப்பாவின் நினைவு அடிக்கடி வந்தது. அண்ணிக்காரியின் ஞாபகம்கூட வந்தது.

தபால்காரர் கொடுத்துவிட்டுப் போன கடிதத்தைப் படிக்கும்போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அப்பா சுகமாக இருக்கிறாராம். அண்ணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். பரணி நட்சத்திரமாம். தரணி ஆள்வானாம்!