பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ★ இல்லம்தோறும் இதயங்கள்


வந்தான். மணிமேகலையை அடிக்கடி டெஸ்ட் செய்யும் டாக்டருடைய நர்ஸிங் ஹோமில் வேலை பார்ப்பவன். இவள், அவனை அண்ணனென்றோ அல்லது தம்பி யென்றோ சொல்லமுடியாத வயது. இருந்த இடம் தெரியாதபடி இருப்பவன். அவன்தான் அடிக்கடி வந்து, மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுப் போவான். சில சமயம், அவள் நோய்த் திகிலில் இருக்கும்போது, அந்த நோய் பற்றிய புத்தகங்களைப் படித்துக் காட்டிவிட்டுப் போவான். “நல்லா படியுங்க. நாளைக்கு டெஸ்ட் வைப்பேன்” என்று அவள் மகிழ்ச்சியாக இருந்தால், தமாஷாக சொல்லிவிட்டுப் போவான். அவனைப் பார்த்ததும் மணிமேகலைக்கு ஆறுதலாக இருந்தது.

“லட்டர்ல விசேஷமா? சந்தோஷமா இருக்கிங்க...”

“பரவாயில்லியே. டக்குன்னு கண்டுபிடிச்சிட்டிங்களே... அண்ணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். தரணி ஆளப்போற பரணி நட்சத்திரமாம். அவன் பிறந்த நேரத்துலயாவது, எனக்கு சுகமானால் சரி.”

“என்ன நீங்க? உங்களுக்குச் சுகமாயிட்டு, சுகமாயிட் டுன்னு எத்தன தடவ சொல்றது. இப்போ நீங்க என்னை மாதிரி. ஆரோக்கியமான யாரையும் மாதிரி—ஒரு நார்மல் பேஷன்ட்.”

“அப்படின்னா, இன்னும் மூணு வருஷம் மாத்திரை சாப்பிடணுமுன்னு ஏன் கஷ்டப்படுத்துறிங்க?”

“இனிமேல் நீங்க கஷ்டமே படக்கூடாது என்கிறதுக்குத்தான். உடம்புல ரிஸிஸ்டன்ஸ் இல்லாததுனாலதான, கிருமிகளுக்குக் கொண்டாட்டமாயிடுது. மூணு வருஷம் ரிஸிஸ்டன்ஸ் பவரைச் சேர்க்கதுக்குத்தான். அதோட தப்பித் தவறி, உடம்புக்குள்ள அந்த கிருமியோ நோயோ இருக்கப்படாது பாருங்க”