பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அ.ச. ஞானசம்பந்தன் நள்ளிருட் கிடந்தேன்’ என்று சாத்தனைச் சொல்லுமாறு செய்கிறார். இவ்வாறு கூறுவதால் அறிவிற்குப் பொருத்தமல்லாத பல செய்திகளைச் சற்றும் ஆராய்ந்து பார்க்காமல் பதிக ஆசிரியர் பாடுகிறார் என்பதை அறிய முடியும். அதுவுமல்லாமல் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாகிய கண்ணகியிடத்து மதுராபதித் தெய்வம் பேசியதையும் தான் கேட்டது போல சாத்தனைப் பேச வைக்கிறார் பதிக ஆசிரியர் ஒரு தெய்வம் மற்றொரு தெய்வத்திடம் பேசுவதை சாதாரண மனிதராகிய இவர் காதால் கேட்டார் என்பது எவ்வளவு பொருத்தமில்லாதது என்பதையும் சிந்திக்க வேண்டும். பதிக ஆசிரியர் படைத்த சாத்தன் மதுரை எரியும் பொழுது அவ்வூரில் இருக்கிறான். இரவு பகல் பாராமல் கண்ணகி கடந்துசென்ற பாதையை அவளுக்கு முன்னர் இவன் கடந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் செங்குட்டுவனிடம் போய்ச் சேரமுடியும். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிகளை இந்தச் சாத்தன் நேரே கண்டிருந்தால் செங்குட்டுவனிடம் சென்ற உடன் இதைச் சொல்லியிருக்க வேண்டாமா? குறவர்கள் வந்து சொல்லும் வரை ஏன் வாய் மூடிக் கொண்டிருந்தான்? இவை எல்லாம் ஒருபுறம் இருக்க குன்றக்குறவர்கள் குணவாயிற் கோட்டத்தைத் தேடி வந்து இளங்கோவினிடம் வருவதற்கு முன்னரே அவரிடம் வந்த இந்தச் சாத்தன் இந்த அற்புதத்தைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறான்? அவர்கள் வந்து கூறிய பிறகுதான் அவ்வரலாற்றை நான் அறிவேன்' என்று பேசுகிறான். இவ்வனைத்தையும் ஒன்றாக வைத்து நோக்கினால் பதிகம் என்பது நூல் தோன்றி ஆறு, ஏழு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் யாரோ ஒருவர் இந்நூலையும் நூலாசிரி யரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்ட முனைந்துள்ளார். -