பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 41 இன்று வழங்கப்படும் இளங்கோவின் வரலாற்றிற்கு மேலே கண்ட அடிகளே சான்றாகும். ஒப்பற்ற பெருங்காப்பியத்தை நாடக பாணி கலந்த காப்பியப் பாணியில் அமைத்த இளங்கோவடிகள் காப்பிய இலக்கணத்தை சிறிதும் வழுவாமல் வரந்தரு காதை வரை காப்பாற்றி வந்துள்ளார் என்பதை நன்கறியலாம். கோவலன் கொலை பற்றிய செய்தி கூறும் பகுதியில் காலப் பிரமாணம் அடிபடுகிறது என்பது உண்மைதான். ஆனால் கண்ணகியைக் காப்பாற்ற அவளைத் துறக்கத்திற்கு தயார் செய்ய வேண்டியே இத்தவற்றைச் செய்கிறார் இளங்கோவடிகள், இது தவிர காப்பிய இலக்கணத்திற்கு முரண்படும் எந்த ஒரு சிறு பகுதியும் சிலப்பதிகாரத்தில் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் எதிராக எந்தக் காப்பியப் புலவனும் நாடக ஆசிரியனும் செய்யாத ஒரு பகுதி வரந்தரு காதையில் இடம் பெறுகிறது. எந்த ஒரு காப்பிய ஆசிரியனும், படர்க்கை நிலையில் பேசுவானே தவிர தன்மையாக (First person) நின்று பேசும் இடமே இராது. அப்படியே பேசுவதானால் பாத்திரங்களின் செயல் விளக்கமாக அது அமையுமே தவிர பன்னிரெண்டு வரிகளில் தன் வரலாற்றைத் தானே கூறிக் கொள்ளும் நிலை வேறு எந்தக் காப்பியத்திலும் இடம்பெறாத ஒன்றாகும், அதிலும் தான் செய்த மாபெரும் தியாகத்தை கண்ணகித் தெய்வம் தன்னிடமே கூறுவதாகப் பாடுவது முற்றிலும் அடாத செயலாகும். இளங்கோவைப் போன்ற ஒரு மாபெருங்கவிஞர் இதனைச் செய்தார் என்று கூறுவது அவர் பெயருக்கே இழுக்குச் சேர்ப்பதாகும். சேர நாட்டு வரலாற்றில் குணவாயிற் கோட்டத்தில் அரசு துறந்து இருந்தார் ஒர் இளவரசர் என்ற குறிப்பு எந்த தமிழ் இலக்கியத்திலும் இடம் பெறவில்லை. வஞ்சிக் காண்டத்தில் காணப்படும் செங்குட்டுவனின் வடபுல யாத்திரை வேறு எந்தத் தமிழ் இலக்கியத்திலும் இடம் பெற வில்லை. இதனை உண்மையென்று எடுத்துக் கொண்டாலும்