பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற ஜைனம் பெளத்தம் ஆகிய இரு சமயங்களுக்காகப் பெளத்தத்திற்கு இரண்டும் (மணிமேகலை, வளையாபதி) ஜைனத்திற்கு மூன்றும் என்று தொகுத்துக் கூறிவிட்டார். அந்நாள் முதல் இந்நாள் வரை ஐம்பெருங்காப்பியம் என்ற தொடரும் அது குறிக்கும் ஐந்து நூல்களும் பெருங்காப்பியங்களா? என்ற வினாவை யாரும் எழுப்பவில்லை. அது மட்டுமல்லாமல் சிலப்பதிகாரத்தை ஜைன சமயத்திற்கு உரியது என்று வாலாயமாகக் கூறி வருகிறோம். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் என்பதும் அவர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் என்பதும் செங்குட்டுவன் என்ற சேர மன்னனின் தம்பி என்பதும் எங்கே யாரால் உறுதியாகக் கூறப்பட்டுள்ளன என்று பார்த்தால் சில புதுமைகளைச் சந்திக்க நேரிடும். சிலப்பதிகார நூலுக்கு முன்னர் பதிகம் என்ற ஒன்று காணப்படுகிறது. தொண்ணுாறு வரிகளைக் கொண்ட இப்பகுதி இளங்கோவடிகளாலேயே இயற்றப்பட்டது என்று நம்புகிறவர்கள் அன்று முதல் இன்று வரை உண்டு. இந்தப் பதிகம் இல்லையானால் இளங்கோவடிகள் சேரன் தம்பி என்பதும், அரசைத் துறந்து குன்னவாயில் கோட்டத்தில் இருந்தார் என்பதும் யாருக்கும் தெரியாத கதையாகிவிடும். இப்படிப்பட்ட பல கருத்துக்களைக் கூறும் பதிகம், காப்பியம் தோன்றிய காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டு யாரோ ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாகும்.

திருவள்ளுவரைப் போல இளங்கோவடிகளுக்கும் உண்மைப் பெயரென்ன? பெற்றோர்கள் யார்? எப்போது வாழ்ந்தார்? என்பனபோன்ற செய்திகள் இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை. அரசுரிமை பெற வேண்டிய அவர் அரசைத் துறந்து குனவாயிற் கோட்டத்தில் துறவியாக வாழ்ந்தார் என்று பதிகம் பேசுகிறது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. செங்குட்டுவனைப் பற்றி அவன் பெயரோடு சேர்த்துப் பல நிகழ்ச்சிகள் நூலில் பேசப்பட்டு உள்ளன என்பது