பக்கம்:இளந்தமிழா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வீரன் குரேன் சாந்த முனிபெயர் கேட்டதும்-மக்கள் சற்றுத் தணிந்தனர் கோபத்தீ; “காந்தியின் ஆணையை மீறிடோம்-பகைக் கைத்தடி தன்னையும் சீறிடோம்'

என்று குமரன் இசைத்தனன்-அவன் இன்மொழி வாய்மேல் அடித்தனன். குன்றுபோல் நின்றுநம் வீரனும்-ஜய கோஷத்தை மேலும் முழக்கினன்.

மார்பிலும் கையிலும் காவிலும்-பாவி மாறி யடித்தனன் வேகமாய்: பார்வை கலங்கிய போதிலும்-வீரன் "பாரதம் வாழ்கெ'னக் கூவினன்.

மிருக பலமொரு பக்கமாம்-ஆன்ம மேன்மைப் பலமொரு பக்கமாம்; தரும பலமொரு பக்கமாம்-கொடுந் தடியின் பலமொரு பக்கமாம்.

உடலை நொறுக்கி யடக்கினல்-நெஞ்சில் ஓங்குபேர் ஆர்வம் ஒடுங்குமோ? கடலின் கொதிப்பைக் குறுந்தடி-வீச்சிற். கட்டுப் படுத்திட லாகுமோ?

கொடியும் பறந்தது வானிலே-ஆனல் குமரன் மயங்கி விழுந்தனன்; வடியுங் குருதியும் மண்மிசை-அடிமை மாசைத் துடைத்துப் படிந்தது.

           114
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/116&oldid=1360632" இலிருந்து மீள்விக்கப்பட்டது