பக்கம்:இளந்தமிழா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லுடைக்கும் கன்னி

சாலைக்குச் சல்லியெலாம் சதுராய் உடைத்திடுவேன்;
வேலைக்குப் பின் வாங்கேன் விருப்பமுடன் எந்நாளும்
காலைப்பொழுதிருந்து கங்குல்வரை ஓயாமல்
சேலைத்துணியொன்றைச் சிரஞ்சேர்த்து மைக்கூந்தல்
கட்டியொரு முடியிட்டுக் காய்கின்ற வெய்யிலிலே
அட்டியின்றிக் கல்லுடைப்பேன். அடிபுழுதிக் காற்றினிலும்
சொட்டுமழை கொட்டுமழைத்தொல்லையிலும் சுத்தியல்சம்
மட்டிகொண்டு தகர்த்திடுவேன் வம்பளந்து நின்றறியேன்
உழைப்புக்குக் கெட்டியென்றே ஊர்புகழும். பணிசெய்ய
அழைப்புக்குப் பஞ்சமில்லை ஆனபெருங் கல்லெல்லாம்
என்பார்வை பட்டவுடன் எடுத்தால் மசிந்துவிடும்-
என்றாலும் உயிரனையார் இதயமெனும் கல்லுக்கே
இளைத்தேன்; இளகவைத்தல் என்னாசை வேறில்லை-
களைத்தேன் பெருமூச்சாய்க் கண்ணருவி யானேனே.


133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/135&oldid=1359870" இலிருந்து மீள்விக்கப்பட்டது