பக்கம்:இளந்தமிழா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அடிமையின் வேண்டுகோள்


என்மனைக் கேகிடும் இவ்வழி அறிவேன்---
மனைவியும் அங்கே வழிபார்த் திருப்பாள்;
இரவெலாம் என்றனைக் காணு தேங்கிக்
கவலையால் உள்ளம் கசிந்தழு திருப்பாள்;
குழந்தைகள் இரண்டும் குலைகாய்ந் திருக்கும்;
கண்ணிர் வடித்துக் கதறியே துடிக்கும்;
ஆயினும் அவ்விடம் போயென் செய்வது?
கையினில் இருந்த காசெலாம் கடையிலே
கள்ளின் வெறியிலே கரைந்துபோய் விட்டது.
வாய்வழிந் தோடிய பேய்க்கள் நனைத்திடத்
தலைதனைப் பாதையில் சாய்ந்துநான் இரவெலாம்
உருண்டு கிடந்தேன் உணர்வில் லாமல்:---
இந்தமு கத்தினைக் கொண்டுநான் இல்லம்
எப்படிச் செல்வது? என்னைக் கண்டதும்
துயரெலாம் மறைத்துச் சிறுநகை காட்டி
வந்தழைத் தேகும் மனைவியின் முன்னே
வெறுங்கை_நீட்டினல் பருக்கையும் வேகுமோ?
வாடிய வயிறுகள் மகிழ்ந்து நிறையுமோ?
அப்பா எனவரும் அருமைக் குஞ்சுகள்
உப்புக் கூழும் உண்டிட லாகுமோ?
சீச்சீ இந்தச் சிறுமையேன் செய்தேன்?
மதியிழந் தொவ்வொரு மாலையும் அந்தக்
கடையினை நோக்கியே காலிழுக் கின்றது;
காலையில் பிறக்கும் உறுதியும் கவலையும்
மாலையில் மறைந்திடும் மாயமென் தெரியேன்.
மறைந்து மறைந்துநான் வளர்த்தஇப் பழக்கம்
இறுகப் பிடித்தெனை என்றும் அடிமையாய்ச்
செய்ததே அந்தோ! சீரெலாம் குலைந்தேன்.
வாட்டமே அறியா மனைவியும் வாடவும்;


91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/93&oldid=1359605" இலிருந்து மீள்விக்கப்பட்டது