பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

இளமையின் நினைவுகள்


அந்த வண்டியில்தான் செல்லுவார். அவருக்கு வண்டி ஒட்டுவதற்கு என்று தனி ஆள் இருந்தான். அவன் பெயர் சரியாக நினைவு இல்லை. முனியன் என்று இருக்கலாம் என நினைக்கின்றேன். அந்தச் சிறிய மாடு முனியன் கைப்பட்டவுடன் வேகமாக ஒடும். பாலாற்றில்கூட எங்கும் நிற்காது என நினைக்கின்றேன். தாத்தாவோடு வாலாஜாபாத்துக்குப் பலசரக்குக் கடைக்குப் போவேன். ஏதேதோ சாமான்களையெல்லாம் கடைக்காரன் கட்டிவைப்பான். கடைசியில் அவன் என் கையிலும் ஒரு சிறு பொட்டலத்தை நான் கேளாமலேயே திணிப்பான். அதில் கல்கண்டு அல்லது முந்திரிப்பருப்பு அல்லது திராட்சை இருக்கும். இரண்டொரு நாள் இப்பொட்டலம் தரப்படுவதைக் கண்ட நான் தாத்தா எப்போது சென்றாலும் உடன் செல்லப் பிடிவாதம் செய்வேன். அவர்களும் என்னை அழைத்துக்கொண்டுதான் செல்வார்கள். எனது அம்மா சிலவேளை அதட்டித் தடுக்க முயன்றாலும் அது நடவாது.

ஆண்டுக்கு ஒரு முறை-கார்த்திகை மாதத்தில்-தோப்பில் ஒரு திருவிழா நடக்கும். அதற்குக் ‘கடைஞாயிறு’ விழா எனப்பெயர் உண்டு என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதில் பல பிராமணர்களுக்கு வனபோசனம் அளிப்பார்கள். அப்போது நானும் தாத்தாவும் அந்த ஒற்றை மாட்டு வண்டியில் செல்வோம். திருவிழா எங்களுடையது. எங்கள் தாத்தாவுக்கு அண்ணா ஒருவர் இருந்தாராம். அவர் இவ்வாறு செய்யச் சொல்லி ஏற்பாடு செய்து, அது ஆண்டுதோறும் தவறாமல் நடப்பதற்காக நிலமும் விட்டுச் சென்றிருக்கிறாராம். ஆகவே நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த விழா நடந்துகொண்டேதான் இருக்கும்போலும். (ஆனாலும் இப்போது கிராமத்தில் யாரும் பிராமணர்கள் இல்லையாதலால் வனபோசனம் இல்லை. விழா