பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாத்தாவின் கதைகள்

15



சொல்லுவார்கள். ஆம்! இது போன்று எத்தனையோ கதைகளை நல்ல நீதிகளோடு இணைத்து எனக்கு அந்த ஐந்தும் நிரம்பாத அறியாப் பருவத்தில் சொல்லுவார்கள். நான் பெரியவனாகிய பிறகு அந்தக் கதை பஞ்ச தந்திரத்தில் உள்ள ஒரு கதை என்று அறிந்த பிறகும்கூட அதைத் ‘தாத்தாவின் கதை’ என்றுதான் நான் சொல்லுவது வழக்கம். இப்படி எத்தனையோ கதைகள். ஆம் ! தாத்தா இறந்து மறைந்து விட்டார்கள். அவர் நினைவை மறக்காது வாழவைக்கும் இக்கிளிக் கதையும் அதன் வழி அவர் சொல்லிச் சென்ற நீதியும் எனக்கு இன்றும் முன் நின்றுகொண்டிருக்கின்றன. அவர்கள் சொன்ன அந்த இரண்டு நீதிகள்-பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடத்தலும், கூடிவாழ்தலும்-அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் என்றைக்கும் தேவையான நீதி களாகவே உள்ளதை அறியாதார் யார் ! என் தாத்தாவின் நினைவைச் சாகாமல் வாழவைக்கும் அக்கிளிக்கதையும் நீதிகளும் நெடுங்காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன்.