பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பாட்டியின் அறிவுரை

ன் தாயார் என்னைப் பெற்றகடன் ஒன்றைத்தான் அறிவார். வளர்த்தவர் என் பாட்டி காமாட்சி அம்மாள் தான். பாட்டி என்றால் தாயைப்பெற்ற பாட்டியோ தந்தையைப் பெற்ற பாட்டியோ அல்லர். மேலேகண்ட என் தாத்தாவின் உடன்பிறந்த என் அம்மாவின் அத்தையாகிய பாட்டியாவர். அவர்கள் இளமையிலேயே கணவனை இழந்து எங்கள் பாட்டனாருடைய குடும்பத்தோடு குடும்பமாக ஒன்றிவிட்டவர்கள். அக்குடும்பத்தில் பலநாட்கள் குழந்தையில்லாது நான் பிறந்தமையின் அவர்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அதிலும் பாட்டி எப்போதும் என்னைச் சீராட்டிக்கொண்டே இருப்பாளாம். தாத்தா இறந்தபிறகு இந்தப் பாட்டியுடன் தான் பெரும்பாலும் இருப்பேன். நான் பள்ளிக்கூடம் போகும் வேளை தவிரப் பெரும்பாலும் அவர்களோடு தோட்டங்களுக்குச் செல்வேன். அவர்கள் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு, பூந்தோட்டத்திற்குச் செல்வார்கள். அவர்கள் காலைதோறும் மலர்கள் கொண்டுவந்து பகலில் கட்டி மாலையில் கோயிலுக்குக் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவர்களை இது குறித்துச் சிலர் பண்டாரப்பாட்டி என்றுகூடக் கேலிசெய்வார்கள். எங்கள் ஊரில் கோயிலுக்கு மலர்கொண்டு கொடுப்பவர்கள் பண்டாரங்கள்தாம். அவர்கள் அதற்காக மானியம் பெறுவார்கள். ஆனால் என் பாட்டி அன்பினால் ஆண்டவனுக்குச்செய்யும் தொண்டினையும் பண்டாரத்தொண்டு எனக் ‘கிண்டல்’ செய்வது அவ்வூரில் சிலரது வழக்கமாக இருந்ததாம். எனினும் பாட்டியார் மனங்கோணாது தவறாது தன் தொண்டைச் செய்துவந்தார்கள். நான் அவர்கள் பக்கத்தி-