பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னேயும் அத்தனும் 27


ஒரு நாள் நெல் விலைக்கு அளப்பதற்கு வண்டி வந்தது. அந்த வண்டி ஒட்டி வந்தவர் என் அப்பாவுக்கு வேண்டியவர். அதில் வண்டியின் தேவைக்கு அதிகமாகவே ஒரு மூட்டையை அளந்துவிட்டார்கள். எனக்கு அவ்வளவு கவனிக்கத் தெரியாது. அவர்கள் எண்ணம் நெல் மண்டிக்குப் போவதற்குள் அந்த ஒரு மூட்டையை வழியில் இறக்கிப் போட்டுவிடலாம் என்ற நினைப்புப் போலும். இது நடந்து வண்டி கட்டுவதற்குள் என் அம்மாவுக்கு இந்தச் செய்தியை யாரோ எட்டவைத்துவிட்டார்கள். எனவே அவர்கள் என்னை வண்டியோடு மண்டிக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கு சென்றதும் ஒவ்வொரு வண்டியையும் அளப்பார்களாம். அந்த மண்டிக்காரர் நல்லவர். அளந்து உள்ளதற்கும் அதிகமான ஒரு மூட்டைக்கும் சேர்த்து வீடு தேடிவந்து அம்மாவிடம் பணத்தைக் கொடுத்துச் சென்றார். நான் சரியாகக் கவனிக்காததால் அன்றுஇரவு எனக்கு நல்ல உதை. என் தகப்பனர் வெட்கத்தாலோ என்னவோ அதற்குப் பிறகு இரண்டொரு நாள் வீட்டுக்கு வரவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு அம்மா இந்தப் பயிர் வேலையே வேண்டாம்' என்று மாடுகளையும், வைக்கோல் போர் முதலியவற்றையும் விற்றுவிட்டுப் பயிரையும் குத்தகைக்கு விட்டுவிட்டார்கள். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே சுகமாக உட்கார்ந்து வாழ விரும்பிய என் பெரிய தந்தையார் அவர்தம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டார். இப்படி ஊரில் பெரும் பங்கை வைத்துக் கொண்டு உழுது பயிரிட்டுக் கொண்டு பரம்பரையாக வந்த ஒரு குடும்பம், பயிர் செய்வதையே அடியோடு விட்டுவிட்டது. விட்டு இன்று சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. அன்று தொட்டு இன்றுவரை அந்த நிலம் யார் யார் கையிலோ மாறி மாறிப் பயிரிடப்பெற்று குத்தகை நெல்லை மட்டும் நாங்கள் கொள்ளும் வகையில் அமைத்து விட்டது. எனக்குத் தற்போது இளமையில் நிலங்களைச்