பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இளமையின் நினைவுகள்
32

அப்பாவுடன் பிறந்தவர்கள் நிலை இதுவாக அம்மாவுடன் பிறந்த பெரியம்மா தனியாகப் பிரிந்துவிட்டனர் என மேலே கூறினேன். இருவரும் பக்கத்துப் பக்கத்து வீட்டில்தான் குடியிருந்தார்கள் என்ருலும் பேசுவதுகூடக் கிடையாது. இரண்டு வீட்டுக்கும் இடையில் செல்லுவதற்காக ஒரு வாயிற்படி வழி இருந்தது. இருவரும் அதை அடைத்துப் பூட்டிவிட்டு, இரண்டு பக்கங்களிலும் பழம் பானைகளையும், மரங்களையும் அடுக்கி வைத்து, யாரும் திறக்க முடியாத வகையில் மூடிவிட்டார்கள். வாயிற்கதவுமட்டும் மூடப்பெறவில்லை; அவர்கள் உள்ளங்களும்கூட மூடப்பட்டன என்னலாம். உடன் பிறந்த சகோதரிகள் இருவர் இப்படிப் பொருளால் வேறுபட்டார்கள் என்பதை இன்று நினைத்தால் வருந்த வேண்டியுள்ளது. அன்று இவையெல்லாம் எனக்கு அவ்வளவாகப் புரியாத புதிராக இருந்தன. நேற்று வரையில் போற்றி வளர்த்த என் பெரியம்மா இன்று தெருவில் பார்த்தாலும் பார்க்காததுபோலப் போவது ஏன்? என்பது எனக்கு விளங்கவில்லை. அவர்கள் ஒரு வேளை பார்த்து ஏதாவது பேசினாலும்அதை அறிந்த அன்னை என்னை அவர்களோடு பேசவேண்டாம் என்று அடிக்கக் காரணம் என்ன? என்பதும் அப்போது விளங்கவில்லை. அவர்கள் இருவர் வேறுபாட்டுக்கும் அவர்தம் மனப்போக்குக்கும் கணவன்மார்களே காரணம் என்றாலும் ஊரார் இருவரையும் சேர்க்காது மேலும்மேலும் பிரித்துவைக்க முயன்றதே முக்கியக் காரணம் என்று அன்று ஒரு சிலர்பேசிக்கொள்வார்கள். இன்றைக்கும், பல ஊர்களில் இந்த நிலை இருக்கக் காண்கிறோம் சில நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஏதோ எதிர்பாராத காரணங்களால் மாறுபாடும் வேறுபாடும் கொண்டு நின்ருல் அவற்றை நீக்கி, அவர் தம் குடும்பத்தைக் கூட்டி வைப்பதற்குப் பதில், ஊரில் உள்ள பலர் அவ்வேறுபாட்டை வளர்த்து அவர்களை என்றும் ஒன்றுசேராதபடிச் செய்து அவற்றின்