பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

வளர்த்து வந்தர். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும் தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ஒசி வாங்கியும், தெருவில் சிந்திக் கிடப்பதைப் பொறுக்கித் தின்றும் தன் ஆசையைத் தணித்துக் கொள்வார்.

இராமசாமிக்கு ஆறுவயது ஆகும் போது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பள்ளிக்குப் போகும் பொழுது தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டில் தண்ணிர் வாங்கிக் குடிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்டபோது, அவருடைய தாயார் மிக வருந்தினார். பார்ப்பனர்களுக்கு அடுத்த பெரிய சாதியாக, தங்கள் சாதியை நினைத்துக் கொண்டிருந்த தாயாரால் இதைப் பொறுக்க முடியவில்லை. வேறு சாதியார் வீட்டிலோ சாயபுமார் வீட்டிலோ சாப்பிடக்கூடாது என்பத்ற்காக சில சமயங்களில் காலில் விலங்குக்கட்டை போட்டு விடுவார்கள். அந்தக் கட்டையையும் தோளில் சுமந்து கொண்டு மற்ற பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவார்.

சிறிய பாட்டியின் வளர்ப்பில் இராமசாமி "அடங்காப் பிடாரி" ஆகி விட்டார். அதனால் பாட்டியின் வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர் எண்ணினார்கள். அந்தப் பாட்டிக்கு இராமசாமியைத் தத்து எடுத்துக் கொள்ள ஆசையாய் இருந்தது. பாட்டி ஏழை என்பதாலும், கண்டித்து வளர்க்கவில்லை என்பதாலும், சின்னத்தாயம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

8