மலையில் உருண்ட பாறை
53
ஆனால், அது உருண்டு வந்த வேகத்தினாலே, சில பாறைக் கற்கள் சிதறி ஓடின. அவ்வாறு சிதறிய கற்களில் ஒன்றுதான், புத்தருடைய காலைக் காயப்படுத்தி விட்டது. அந்தப் பெரும் பாறை அங்கே தடைப்படாமல், உருண்டு வந்திருக்குமானால்… …!
இவ்வளவு பெரிய பாறை மலையுச்சியிலிருந்து எவ்வாறு உருண்டு வந்தது? இதை உருட்டித் தள்ளியவர் யார்? மழை காலமாக இருந்தால், வெள்ளத்தினால் மண் இளகிப் பாறை உருண்டது என்று கருதலாம்; அல்லது இடி விழுந்து பாறை புரண்டது என்று நினைக்கலாம். இதுவோ மழையற்ற வெயில் காய்கிற வேனிற்காலம்; பாறை தானாகவே உருண்டு வந்தது என்பது நம்பக் கூடியதன்று.
மாணவர்கள் மலையுச்சியை நோக்கினார்கள். மலையுச்சியிலே தேவதத்தன் நின்று கொண்டு, மலையடிவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். புத்தர் பெருமானைக் கொல்லச் சதி செய்து, மலையுச்சியிலிருந்து பாறையைப் புரட்டித் தள்ளியவன் அவன்தான். தான் கருதிய காரியத்தைப் பாறை செய்து முடித்ததா என்பதை அறிய, பாறையை உருட்டித் தள்ளிய அவன் மேலிருந்தபடியே கீழே பார்க்கிறான்.
முன்பு இரண்டு முறை, ஆட்களை ஏவிப் புத்தரைக் கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சிகளில் தோல்வியுற்றான். இப்போது தானே, தன் கைகளால் பாறையை உருட்டித் தள்ளி, அவரைக் கொல்ல முயன்றான். ஆனால், இப்போதும் அவன் வெற்றி பெறவில்லை. பாறை இடை வழியிலே தங்கி விட்டது.