பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணிந்துரை

மனிதன் தான் கண்டும் கேட்டும் அறிந்த அறிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் பொதிய வைத்து மக்களினம் பயன் அடைய வேண்டும் என்னும் நன்னோக்கத்தின் மீது எழுந்தது தான் கலைக்களஞ்சியம் ஆகும். இம்மண்ணுலகில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கலைக்களஞ்சியம் எழுதும் பணி தொடங்கிவிட்டது. இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாயிரம் கலைக்களஞ்சியங்கள் வரை எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளேதான் கலைக்களஞ்சியத்தை அகரவரிசைப்படி தயாரிக்கும் வழக்கம் ஆரம்பமாகியது.

உலகிலுள்ள முக்கியமான மொழிகளிலெல்லாம் கலைக்களஞ்சியங்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ஜப்பானிய, சீன மொழிகளில் பல தொகுதிகளில் கலைக்களஞ்சியம் வெளியாகி உள்ளது. ஆனால் இவற்றிலெல்லாம் மிகப்பெரியது சீனக் கலைக்களஞ்சியமாகும். அது 5080 தொகுதிகளைக் கொண்டதாகும்.

இவ்வாறு உலகத்தின் முக்கியமான மொழிகளிலெல்லாம் கலைக் களஞ்சியம் வெளிவந்திருக்க, பழம்பெரும் மொழியான தமிழில் மட்டும் வெளிவராதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. 21 ஆண்டு உழைப்பின் மீது அது 1968ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளிவந்து நிறைவு பெற்று அக்குறை நீக்கப்பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் குழந்தைகள் கலைக்களஞ்சியமும் பல தொகுதிகளில் வெளிவந்திருக்கிறது.

இவை தவிர யூத, கத்தோலிக்க, இஸ்லாமியக் கலைக்களஞ்சியங்களும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. நம் தமிழ் மொழியிலும் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் மூன்று தொகுதிகளில் வெளிவந்துள்ளது.

எனினும் குழந்தைகளுக்கான இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் தமிழ் மொழியில் இல்லாதது ஒரு குறையாகவே இருந்துவந்தது. அதனை நிறைவு செய்யும் வகையில் கலைமாமணி மணவை முஸ்தபா அவர்கள் குழந்தைகள் படித்துப்புரிந்து பயனடைய ஒரு கலைக்களஞ்சியத்தை எளிய, இனிய தமிழில் தயாரித்துள்ளார்கள். இதன் பக்கங்களைத் தேவைப்படும் பொழுது மட்டும் திருப்பி பார்க்காமல் ஒரு நாளைக்குச் சில பக்கங்கள் வீதம் தொடக்கம் முதல் இறுதி வரைக் குழந்தைகள் படித்து முடிப்பார்களாயின் வெகு விரைவில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம் நாடுகள். நகரங்கள், பெரியார்கள் பற்றியும் கணிசமான அறிவைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

எம். ஆர். எம். அப்துற் - றஹீம்