பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆய்வுரை

இளஞ் சிறார்களுக்கான இந்த இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

அல்ஹம்து லில்லாஹ்

ஏதேனும் ஒன்றைப்பற்றித் தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமாயின், அத்தகவல்கள் அனைத்தையும் சாதாரணமாக ஒரே நூலில் நாம் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சான்றாக ஒருநாட்டைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் அல்லது தேவைப்படுகிறோம். அதன் வரலாறு பற்றிச் சரித்திர நூலில் தேடுகிறோம். அதில் இருக்கும் மலைகள் போன்றவை பற்றி நில நூலில் பார்க்கிறோம். தட்பவெப்ப நிலைகள் பற்றிப் பிறிதொரு நூலில் படிக்கிறோம். அதன் தொழில் வளம் பற்றி அறிய வேறொரு நூலைத் தேடுகிறோம். இவையனைத்தையும் ஒரே தொகுப்பில் பெற்றுக்கொள்ள முடியுமானால் எவ்வளவு வசதியாக இருக்கும்? இதைத்தான் ஓர் என்சைக்கிளோபீடியா (Encyclopaedia) செய்து நமக்கு உதவுகிறது.

"என்சைக்கிளோபீடியாவுக்கு பல்பொருள் விளக்க நூல்" அல்லது "கலைக்களஞ்சியம்" என்று பெயர் சூட்டுகிறது பேரகராதி.

இதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் பண்டைக் காலங்களில் பல துறைகளிலும் சாதனை நிகழ்த்தியவர்களான சீனர்கள் தாம் என்று என்சைக்கிளோபீடியாவின் வரலாறு தெரிவிக்கிறது. உலகின் மிகப் பெருங் கலைக்களஞ்சியம் ஒன்றை யுங்லே (Yungo) என்பார் 11,000 (பதினோராயிரம்!) தொகுதிகளில் இயற்றியதாகவும், அது 1900ஆம் ஆண்டில் பீகிங் (இன்றைய பெய்ஜிங்) தாக்கப்பட்டபோதும், அதற்கு முன்னர் 1844இல் நான்கிங் (Nanking) நகரம் தீப்பட்டபோதும் பெருமளவு அழிந்துவிட்டதாகவும். இப்போது அதன் சில தொகுதிகளே எஞ்சியுள்ளன என்றும் பல்பொருள் விளக்க நூல் வரலாறு கூறுகிறது.

இத்தகைய கலைக்களஞ்சியங்கள் தொகுத்தமையில் முஸ்லிம்களின் பணியும் கணிசமானதாகும். முஹம்மதுப்னு குதைபா தீனவரியுடைய பத்துத் தொகுதியிலான "கிதசபு உயூனில் அக்பார்." இப்னு அப்தி ரப்பிஹியின் "மிஃப்தாஹால் உலூம்" போன்ற கலைக்களஞ்சியங்கள் பத்து - பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரபி மொழியில் வெளிவந்தவையாகும்.

ஆனால், தமிழில் பொதுவான ஒரு கலைக் களஞ்சியம் இருபது ஆண்டுகளுக்கு முன்தான் வெளிவந்தது. எனினும் இதில் இஸ்லாமிய வாழ்வு நெறி,