பக்கம்:இளைஞர் வானொலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இளைஞர் வானொலி


வானொலி அலையில் பலவகைகள் உள்ள்ன. சில அலைகள் வினாடியொன்றுக்கு 700,000 தடவைகள் அதிர்கின்றன; இன்னும் சில வினாடியொன்றுக்கு ஒரு மில்லியன் தடவைக்குமேல் அதிர்கின்றன. மில்லியன் என்பது பத்து இலட்சம். ஒரு வினாடியில் அலை எத்தனை தடவைகள் அதிர்கின்றனவோ அத்தனை தடவைகளை அதிர்வு-எண் (frequency) என்று வழங்குவர். நாணற் குச்சி எடுத்துக்காட்டில் அதிர்வு என்பது என்ன என்று விளக்கியுள்ளோம். ஒரு முற்றுப்பெற்ற அதிர்வே சுற்று (cycle) என்பது. ஒரு பொருள் அ என்னும் இடத்திலிருந்து தொடங்கி ஆ என்னும் இடத்தை அடைந்து அங்குத் திசைமாறி அங்கிருந்து தொடங்கி மீண்டும் அ என்னும் இடத்தை வந்து அடையுமானால் அஃது ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டது என்று வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒலி பரப்பு நிலையத்திலிருந்து ஒவ்வொரு வினாடியிலும் வெளிவரும் அலைகளை வினாடிக்கு இத்தனே கிலோ - சைக்கிள்கள் என்று குறிப்பிடுகின்றனர். ஆயிரம் சைக்கிள்கள் கொண்டது ஒரு கிலோ - சைக்கிள். வினாடிக்கு இத்தனை சைக்கிள் என்று சொல்லுவதற்குப் பதிலாக இத்தனை மில்லியன் சைக்கிள் என்றும் சொல்லுவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/58&oldid=1396159" இலிருந்து மீள்விக்கப்பட்டது