பக்கம்:இளைஞர் வானொலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. சுருதி செய்தல்

ருவர் வீட்டில் ஆறு அறைகள் இருக்கின்றன. ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொருவர் இருக்கின்றனர். அவர்களிடம் ஒவ்வொரு லெய்டன் சாடி இருக்கின்றது. ஒவ்வொரு சாடியிலும் உள்ள வெள்ளீயத் தகடுகளின் அளவு வேறுபட்டது. இதனால் ஒவ்வொரு சாடியின் அதிர்வு அல்லது அலையின் அதிர்வு-எண் மாறுபட்டிருக்கும் என்பது வெளிப்படை. ஏனெனில், ஒவ்வொரு சாடியிலுமுள்ள வெள்ளீயத் தகடு அளவில் மாறுபட்டுள்ளதல்லவா? ஒருவர் தம்முடைய சாடியிலுள்ள கைப்பிடிக் குமிழைத் திருகி அதிலுள்ள வெள்ளீயத் தகட்டினைச் சாளரத்தின் பலகைகளைப் போல மேலும் கீழுமாக அசையச் செய்து தம்முடைய வெள்ளீயத் தகட்டின் அளவினை வெவ்வேறு ஐந்து தடவைகளில் ஏனைய ஐந்து பேரின் சாடிகளிலுள்ள தகடுகளின் அளவுகளுக்குச் சமமாக வருமாறு செய்யலாம். அஃதாவது, அவருடைய சாடியைத் தனித்தனியாக ஒவ்வொருவருடைய சாடியுடனும் "சுருதி செய்ய” (tuning) முடியும். இங்ஙனம் இரண்டு சாடிகளில் தோன்றும் மின்னோட்டத்தின் சுற்று நேரங்களை ஒன்றாக ஒத்திருக்கும்படி செய்வதைத்தான் சுருதி செய்தல் என்று பேசுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/74&oldid=1396380" இலிருந்து மீள்விக்கப்பட்டது