பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அக்கரூட்டு: மர வகைகளில் சிறந்த ஒன்று, இதை ஆங்கிலத்தில் 'வால்நட்' (Walnut) என்று அழைப்பார்கள். இம்மரம் 33 மீட்டர் உயரம்வரை வளரும். இதன் அதிகபட்ச சுற்றளவு 6 மீட்டர்வரை இருக்கும். இவை நூறாண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடியவை. இம்மரங்கள் நீண்டு அழகாகத் தோற்றமளிப்பதால் இவை பெரும்பாலும் பூங்காக்களிலும் சாலை ஓரங்களிலும் வளர்க்கப்படுகின்றன. இவை ஆசிய நாடுகள் சிலவற்றிலும் ஐரோப்பா, அமெரிக்கா மேற்கிந்தியத் தீவுகளிலும் வளர்க்கப்படுகின்றன.

இம்மரத்தின் பகுதிகள் பலவும் நமக்குப் பயன்படுகின்றன. இதன் பட்டையும் கனியின் மேல்தோலும் சாயத்தொழிலுக்கும் பதனிடும் தொழிலுக்கும் பயன்படுகின்றன. கனியின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு உண்ணச் சுவையாக இருக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்குப் பயன்படுகிறது. ஓவியர்கட்குத் தேவைப்படும் எண்ணெய் வண்ணம் தயாரிக்கவும், அச்சு மை, சோப்பு போன்றவை செய்யவும் பயன்படுகிறது. இதனைக் கொண்டு மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

அக்கருட்டு மரம் உறுதியானது. செதுக்கு வேலைகளுக்கு மிகவும் ஏற்றது. இதைக்கொண்டு அழகிய மரச்சாமான்களும் கலைப் பொருட்களும் உருவாக்கப்படுகின்றன. இம்மரம் தகடுபோல் அறுக்கப்பட்டு ஒட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது வெப்பத்தாலும் ஈரப்பசையாலும் பாதிக்கப்படுவதில்லை. எனவே, துப்பாக்கிக் கட்டை, விமானத்தின் சில பாகங்களுக்கும் அக்கருட்டு மரம் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன் படக்கூடியவைகளாகும்.


அக்கி (Herpes): இது நம் உடல் தோலின் மீது உண்டாகும் நோயாகும். இந்நோய் பல வகையினவாகும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை எனும் இருவகைகளே முக்கியமானவை.

இந்நோய் 'வைரஸ்' எனப்படும் ஒருவகை நச்சு நுண்மங்களால் உண்டாகிறது. இந்நோயின் தொடக்கமாக உடலில் ஒருவித நமைச்சலும் அதைத் தொடர்ந்து எரிச்சலும் உண்டாகும். அதனால் சொரிய நேரிடுகிறது. அவ்விடம் சிவக்கிறது. பின், அங்கு சிறு கொப்புளங்கள் உண்டாகின்றன. இந்நோய் சாதாரணமாக முகம், கன்னம், மூக்குப் பகுதிகளில் அதிகம் தோன்றும். மலேரியா, நியுமோனியா காய்ச்சல், வயிற்றுக்கோளாறு போன்ற நோய்கள் பீடித்திருக்கும்போதும் அக்கி நோய் உண்டாக வாய்ப்புண்டு. இந்நோய் கோடைக் காலத்தில் அதிகம் உண்டாகும்.

நமைச்சல், எரிச்சல் உண்டாகும்போது கூடியவரை சொரிவதைத் தவிர்க்க வேண்டும். அப்போது ‘நைட்ரஸ் ஈதர்’ எனும் மருந்தை சிவந்த பகுதிகள் மீது தடவினால் அக்கி தோன்றாமல் மறைந்து போகும்.

அக்கிக் கொப்புளங்களும் அம்மைக் கொப்புளங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் தானாகவே மறைந்து போகும்.


அகச்சிவப்புக் கதிர்கள் : இதை ஆங்கிலத்தில் 'இன்ஃப்ரா ரெட் ரேய்ஸ்' (Infra Red Rays) என்று கூறுவார்கள். அகச்சிவப்புக் கதிர்கள் வெப்பம் மிகுந்த கதிர்களாகும். இவை கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆயினும் நம் உடல் மூலம் வெப்ப உணர்வைப் பெற முடியும். கண்ணுக்குத் தெரியும் சூரிய ஒளிக்கற்றையை முப்பட்டகம் வழிச் செலுத்தினால் அது ஒரு நிறமாலையை உரு