பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஒஸோன் படுகை

இவற்றினுள் நுழைகிறது. இலையில் இயற்கையாய் அமைந்துள்ள பச்சையம் காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவைத் தனியே பிரித்தெடுக்கிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட கரியமிலவாயு வேரிலிருந்து வரும் சத்து நிறைந்த நீருடன் கலக்கிறது. இக்கலவை சர்க்கரைச் சத்தாகவும் மாச் சத்தாகவும் மாறுகிது. காற்றிலிருந்த கரியமிலவாயு கரைந்து போகவே, எஞ்சிய பிராணவாயு இலைத் துளைகளின் வழியே வெளியேறி விடுகின்றது. இச்செயல் அனைத்தும் சூரியஒளி மூலமே இனிது நடந்தேறுகிறது. குளோரோபில் என்னும் பச்சையம் முதலில் ஒளி ஆற்றலை சூரிய ஒளியிடமிருந்து உறிஞ்சி கிளர்வுற்று காற்றில் காணும் நீர்மூலக்கூறினை உடைத்து, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகவும் மாற்றுகிறது. பின்னர் ஹைட்ரஜன் காற்றில் காணும் கார்பன்-டை-ஆக்சைடை ஒடுக்கி கார்போ ஹைட்ரேட்டாக மாற்றுகிறது.

ஒளிச்சேர்க்கையால் மற்றொரு மாபெரும் நன்மை ஏற்படுகிறது. நாம் சுவாசிக்க பிராண வாயு மிகுதியும் தேவைப்படுகிறது. சுவாசித்த பின் நாம் கரியமில வாயுவை வெளிவிடுகிறோம். ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் கரியமில வாயுவை ஏற்றுக்கொண்டு பிராணவாயுவை வெளியேற்றி விடுகின்றன. இதனால் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான பிராணவாயு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

ஒளியாண்டு : தரைப்பகுதியில் ஒரு இடத்துக்கும் மற்றொரு இடத்திற்கும் இடையே உள்ள தூரத்தைத் துல்லியமாக அளந்து கிலோமீட்டர் கணக்கில் குறிக்கிறோம். ஆனால் வானில் ஒரு கோளுக்கும் இன்னொரு கோளுக்கும் இடையேயுள்ள தூரத்தை கிலோமீட்டரில் குறிப்பதில்லை. ஏனெனில் விண்வெளியை தரைப்பகுதியை அளப்பது போல் கிலோமீட்டர் கணக்கில் அளக்க இயலாது. எனவே வானத் தொலைவுகளை ஒளியாண்டு என்ற கணக்கிலே அளக்கிறார்கள். ஒளி ஒரு விநாடிக்கு 8,00,000 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்கிறது எனக் கணக்கிட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின் அடிப்படையில் ஓராண்டுக் காலத்தில் பாயும் ஒளியின் வேகமே ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. இது வான தூரத்தை அளக்கும் அளவியாகவும் கொள்ளப்படுகிறது.

ஒளிராக் கோளங்கள் : வானில் காணப்படும் கோள்களில் இயற்கையாக ஒளிவீசித் திகழும் கோளங்கள் பல உண்டு. அவை ஒளிர் கோளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தாமாகவே ஒளியைப் பாய்ச்சுவனவாகும். சூரியனும் நட்சத்திரங்களும் இவ்வாறு தாமாகவே ஒளி வீசுகின்றன.

மற்றொரு வகையான கோளங்களுக்கு இவ்வாறு இயற்கையாக ஒளி வீசும் தன்மை இல்லை. இவை சூரியனிடமிருந்தும் நட்சத்திரங்களிடமிருந்தும் ஒளியைப் பெற்று மீண்டும் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. சந்திரனும் பூமியும் இயற்கையாக ஒளிவீசும் தன்மை இல்லாதவை. இவைகள் 'ஒளிராக் கோளங்கள்’ என அழைக்கப்படுகின்றன. எனினும், இவை சூரிய ஒளியைக் கிரகித்துப் பின் அவற்றை பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. வான வெளியில் சுற்றிவரும் கோளங்களில் ஒளிரும் கோளங்களை ஒளிராக் கோளங்கள் சிறிது நேரம் மறைத்து விடுவதும் உண்டு. அப் போது ஏற்படும் ஒளிர் கோள மறைவே 'கிரகணம்’ என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் இவ்வாறு நிகழ்பவைகளே யாகும்.

ஓஸோன் படுகை : இது ஒரு மெல்லிய வாயு படுகையாகும். நமது தலைக்கு மேலே 12-45 கி.மீ. உயரத்திற்கு நமது பூமிக் கோளத்தைச் சூழ்ந்து ஓஸோன் படுகை அமைந்துள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர் போன்றவை மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் மாபெரும் தீங்கு விளைவிக்கக் கூடியனவாகும். இக்கொடிய புற ஊதாக்கதிர் போன்றவை பூமியை அடையாமல் தடுக்கும் தடுப்புச் சுவராக வானில் அமைந்திருப்பது ஒஸோன் படுகையேயாகும்.

அண்மைக் காலத்தில் அண்டார்க்டிக்கிற்கு மேலேயுள்ள ஓஸோன் படுகையில் துவாரம் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியில் வாழும் உயிர்களை நேரடியாகப் பாதிக்கும் என அறிந்துள்ளனர்.

கான்கார்டு போன்ற ஒலியினும் அதிவேகம் செல்லும் விமானங்களும்குளோரோஃபுளோரோ கார்பன்கள் எனப்படும் கொடிய கூட்டுப் பொருள்களும்தான் இந்தத் துவாரம் ஏற்பட்டதற்குக் காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள்.