பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரியக்கம்

113


கடற்பாசி : நம் வீடுகளில் மீன் தொட்டி இருந்தால் அதன் அடிப்பகுதியில் சிறு மணற் பரப்பில் சின்னஞ்சிறு செடிகள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். இவை பாசிச் செடிகள் எனப்படும். இப்பாசிச் செடிகள் குளங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்களின் அடிப்பகுதியில் முளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும். இவை நீருக்கடியில் தரையில் முளைத்திருப்பதால் சாதாரணமாக நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.

உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான நீர்ப்பாசி வகைகள் உள்ளன. இவை பஞ்சு போல் மென்மையானவைகளிலிருந்து கரடு முரடானவை வரை பலவகைகள் உண்டு. இவற்றில் கடலினடியில் முளைக்கும் கடற் பாசியின் மயிலிறகு போன்ற அதன் இலையின் நீளம் 100 அடிகளுக்கும் மேல் இருக்கும்.

உலகில் தாவரங்கள் உருவான காலத்தில் இருந்த வடிவிலேயே இன்றும் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவற்றில் சில தனியானவைகளாகவும் ஒற்றை உயிரணுக்களை (Cell) உடையனவாகவும் உள்ளன. மற்றவை பல உயிரணுக்களுடையவையாகவும் ஒன்றிலிருந்து மற்றொன்று கிளைப்பதாகவும் உள்ளன. இவற்றின் ஒருபகுதி அப்புறப்படுத்தப்பட்டாலும் உடனே மாற்றாக மற்றொரு தொகுதி உருவாகிவிடும்.

எல்லா பாசி வகைகளும் 'குளோராஃபில்' என்றழைக்கப்படும் பச்சையம் உடையதாகும். இது சூரியக்கதிர்களை ஈர்த்து, அவற்றைக் கொண்டு தங்களுக்கு வேண்டிய உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இந்தச் செயற்பாட்டைப் பொருத்தவரை இவை காளான்களிலிருந்த வேறுபடுவதாக உள்ளன. காளான்கள் மற்ற தாவர வகைகளைச் சார்ந்ததாக உள்ள்து. நீர் நிலைகளின் ஓரங்களில் உள்ள கரைகளில் பச்சை நிறப் பாசி படர்ந்திருப்பதைக் காணலாம்.

பேருருக் கொண்ட கடற்பாசிகள் பச்சையத்தோடு மஞ்சள் நிறங் கலந்த மாநிறமுடையதாக இருக்கும். மாநிற கடற்பாசிகளில் சிலவற்றின் தண்டு சற்று பருத்தும் தடித்தும் இருக்கும். இவை கயிறுகளாகப் பயன்படுவதும் உண்டு. சில 'ஐயோடின்’ எனும் கறையத்தைத் தருகின்றன.

கடல் தாவரங்களிலேயே ஒருவகை சிவப்பு நிறக் கடற்பாசி கண்ணைக் கவர்பவைகளாகும். சிவப்பு வண்ணஞ் சார்ந்த பலவகை கடற் பாசிகள் உண்டு. இச்சிவப்பு வண்ண கடற் பாசிகள் பெருமளவில் கடலடியில் இருப்பதால் நீரின் நிறமே மாறுவதும் உண்டு. செங்கடற் பகுதி செந்நிறமாகத் தோற்றமளிப்பதற்குக் காரணம் அக்கடலடியில் எண்ணற்ற முறையில் வளர்ந்து பரவியுள்ள செந்நிறக் கடற்பாசிகளே யாகும்.

கடற்பாசிகள் ஈரணுக்களுள்ள நுண் உறைகளைக் கொண்டதாகும். கடற்பாசி அழியும் போது இந் நுண் உறைகள் கடலடியில் தங்கி விடும். இவ்வாறு காலங்காலமாகத் தங்கிச் சேர்ந்து வரும் இந் நுண்ணுறைகள் பல மீட்டர் பருமனுடையதாகச் சேர்ந்துள்ளது.

கதிரியக்கம் : தனிமங்களுள் சில உயர் வகைத் தனிமங்கள் உண்டு. அவை யுரேனியம், ரேடியம், தோரியம் போன்றவைகளாகும். இவைகட்குச் சில தனிப்பண்புகள் உள்ளன. இவை கதிர்களைத் தாமாக வெளியிடுகின்றன. இக்கதிர்கள் பிற பொருட்களை ஊடுருவும் தன்மையுடையனவாகும். இக்கதிரி இயக்கமே 'கதிரியக்கம்' (Radioactivity) என அழைக்கப்படுகிறது.

இவ்வுண்மையைக் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் ஹென்றி பெக்கரல் எனும் ஃபிரான்ஸ் நாட்டு அறிவியல் ஆய்வாளர். அவர் ஒரு சமயம் எக்ஸ்-கதிர் எனும் ஊடுகதிர் ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஆராய்ச்சி மேடைமீது யுரேனியத் துண்டு ஒன்று இருந்தது. அதன் அருகில் இருந்த ஒளிப்படத்தகட்டில் இரசாயன மாறுபாடு ஏற்பட்டிருந்தது. அதைக்கண்டு வியந்த பெக்கரல் இதற்கான காரணத்தை ஆராய்ந்தார். யுரேனியத்தி லிருந்து வெளிப்பட்ட கதிர்களே ஒளிப்படத் தகட்டில் இராசயன மாறுபாடு ஏற்படக் காரணம் என்பதை உணர்ந்தார். அதன் பின்னர் யுரேனியம் வெளிப்படுத்தும் கதிர் பிற உலோகங்களையும் ஊடுருவ வல்லன என்பதைக் கண்டறிந்தார்.

அதன்பின் தொடர்ந்து கதிரியக்கம் பற்றி ஆய்வு செய்தார். யுரேனியம் மட்டுமல்ல வேறு சில தனிமங்களும் கதிர் வீச்சை வெளிப்படுத்துகின்றன என்பதைக் கண்டறிந்தார். தோரியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிர் வீச்சுத் தன்மையை இயல்பாகக் கொண்டவை என்பதை அறிந்தார்.