பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கரியமில வாயு

பின் ஏற்பட்ட அறவியல் வளர்ச்சியின் விளைவாக நீராவிக் கப்பல்கள் உருவாக்கிச் செலுத்தப்பட்டன. அதன்பின் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக டீசலில் இயங்கும் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. கடற்பயணத்தின்போது விபத்து எதுவும் ஏற்பட்டால் தப்பிச் செல்ல பாதுகாப்போடு கூடிய உயிர்காப்புப் படகுகள் ஒவ்வொரு கப்பலிலும் உள்ளன.

கம்போஸ்ட் : மனிதர்கட்கும் மற்ற உயிரினங்கட்கும் உணவு தேவைப்படுவது போலவே பயிரினங்கட்கும் உணவு தேவைப்படுகிறது. பயிரினங்கட்குத் தேவைப்படும் சத்துணவே 'உரம்' ஆகும். நாம் எப்படி பல்வேறு உணவுப் பொருட்களை கலந்து கூட்டுணவாக உட்கொள்கிறோமோ அதே போன்று பயிர்கட்கும் 'கம்போஸ்ட்' எனும் கூட்டுரத்தைத் தயாரித்து அளித்தால் அவை செழிப்பாக வளர்ந்து வளம் தரும். இக்கூட்டு உரத்தைத் தயாரிக்க மக்கும் தன்மை குறைந்த மரம், சணல், பருத்தி, காகிதம் போன்றவை பயன்படா. எளிதில் மக்கிக் கூழ் தன்மை பெறவல்ல புல்பூண்டுகள், இலைதழைகள், பறவை மற்றும் கால்நடைகளின் கழிவுப்பொருட்கள் ஆகியவைகளே அதிகம் தேவைப்படும். இவற்றோடு சாம்பலையும் மண்ணோடு கலந்து அடுக்குகளாக அமைத்து கூட்டு உரம் தயாரிப்பார்கள். இத்தகைய அடுக்குகளின் பக்கம் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வுரக்குழி மழையில் நனையாமலிருக்கவும் வெயிலில் காய்ந்து போகாமல் இருக்கவும் கொட்டகை அமைப்பதும் உண்டு. இத்தகைய பாதுகாப்புடன் அமைக்கப்படும் கம்போஸ்ட் உரக்குழிகளில் பாக்டீரிய சிதைவு அதிக அளவில் ஏற்படும். அப்போது மிகு வெப்பம் உண்டாகும். இவ்வெப்பம் கம்போஸ்ட் உரத்தயாரிப்புக்கு மிக அவசியமாகும். இதனால் தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அழிய நேரிடுகிறது. இதற்காக உண்டாகும் வெப்பம் வெளியேறிவிடாமல் தடுக்க மண்ணால் உரக்குழியை நன்கு பூசுவதும் உண்டு.

இவ்வாறு பல நாட்கள் வைத்திருந்தால் குழியில் உள்ள உரம் நன்கு மக்கி கருநிறக்குழைவாக ஆகிவிடும். உரக்குழியை உருவாக்கும்போதே உண்டாகும் அமிலத்தன்மையைக் குறைக்க சுண்ணாம்பையும் சேர்ப்பர்.

பொதுவாக கம்போஸ்ட் உரம் பல நுண்ணுயிர்களை தருவதின் மூலம் பெரிய மூலக்கூறுகள் சிதைவுபட்டு தாவரங்களால் உறிஞ்சத்தக்க உரங்களைத் தருகின்றன.

கரியமில வாயு : 'கார்பன் டை யாக்சைடு' என அழைக்கப்படும் கரியமில வாயு பிராண வாயுவாகிய ஆக்சிஜனோடுஇணைந்த கூட்டுக் கலவை வாயுவாகும். கரியமில வாயுவுக்கு நிறம் இல்லை. நாம் எப்போதும் கரியமிலவாயுவை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம். நம்மைப் போன்றே பிற உயிரினங்களும் கரியமில வாயுவை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனினும் தாவர இனங்கள் அனைத்தும் கரியமில வாயுவை சுவாசித்து ஆக்சிஜனாகிய பிராணவாயுவை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் காற்று மண்டலத்தில் சமச்சீர்நிலையைப் பெறமுடிகிறது.

தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை காற்றிலுள்ள கரியமிலவாயுவையும் நீரையும் கொண்டு சூரியக் கதிரின் துணையோடு உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. கார்பன் டையாக்சைடாகிய கரியமிலவாயுவில் கார்பன், ஆக்சிஜன் ஆகிய இரு வெவ்வேறு தனிமங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொருகார்பன் அணுவுடனும் இரு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்திருக்கும்.

எண்ணெய், மரம் போன்றவை எரியும் போது கரியமிலவாயு வெளிப்படும். கரியமில வாயு காற்றைவிட கனமானது. கரியமில வாயுவை நன்கு குளிரவைத்தால் திரவ நிலை அடையும், இதைத் திடப்பொருளாகவும் உருமாற்றம் செய்ய இயலும்.

நெருப்பை அணைக்கக் கரியமிலவாயுவையே பயன்படுத்துவர்.

தற்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவைகளை எரி பொருளாக எரிப்பதாலும், தொழிற்சாலைகள் வெளிவிடும் கரியமிலவாயு ஆகியவைகள் காற்றில் காணும் கார்பன்டையாக்சைடின் அளவினை அதிகரிக்கச் செய்கின்றன. மற்றும் காடுகளை அழித்ததின் மூலம் ஒளிச்சேர்க்கை குறைந்து காற்று மண்டலத்தில் மாசுகள் அதிகம் சேருகின்றன. இக்காரணத்தால் பூமியின்