பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஸ்மிக் கதிர்கள்

133

விட்டுக் கலக்கி உருவாக்கப்படுகிறது. இஃது செங்கல் முதலானவற்றைவிட உறுதியும் வலுவும் நிறைந்ததாகும்.

பெரும் உத்திரங்கள் கான்கிரீட் கலவையும் இரும்பும் கொண்டு உருவாக்கப்படுகிறது. எஃகுக் கம்பிகளை வேண்டிய வடிவில் வளைத்துப் பின்னி அதனிடையேயும் வெளிப் புறத்திலும் கான்கிரீட் கலவையைக் கொட்டி இறுக்கமடையச் செய்கிறார்கள். இதுவே வலுவேற்றிய கான்கிரீட் ஆகும். கான்கிரீட் கலவை மேலும் மேலும் இறுக்கமடைந்து வலுவடைய சில நாட்கள் நீரில் ஊற வேண்டும். எனவே, சில வாரங்கள் கான்கிரீட் பகுதிகளில் நீரைத் தேக்கியோ அல்லது தொடர்ந்து நனைக்கப்பட்ட கோணி அல்லது வைக்கோல் பிரிகளைக் கொண்டு சுற்றப்படுகிறது. இக்காலத்தில் பல மாடிக் கட்டிடங்கள் கான்கிரீட் கொண்டே கட்டப்படுகின்றன.

மற்றும், பெரிய பாலங்களும், அணைக்கட்டுகளும் கடல் அரிப்பைத் தடுக்கும் அலை வாங்கித் தடுப்புச் சுவர்களும் கான்கிரீட் கொண்டே கட்டப்படுகின்றன. கான்கிரீட் மிக உறுதியானது மட்டுமல்ல; சிக்கனமானதும்கூட. இதனால் அரிப்பு, தீ விபத்து போன்றவைகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை.


கானல் நீர் : பாலைவனத்தில் நல்ல வெயில் நேரத்தில் நிற்கும் ஒருவர் தூரப் பகுதிகளைப் பார்க்கும்போது அங்கே தெளிந்த நீரோடு கூடிய ஏரி இருப்பதுபோல் தோன்றும். அங்கே விரைந்து சென்று பார்த்தால் நீர்ப் பகுதிபோல் காட்சியளித்த பகுதியும் விலகிச் சென்று கொண்டே இருக்கும். நெருங்கிப் போகும்போது அப்படி ஒரு தடாகம் அங்கு இல்லாமலே போகும். அதேபோன்று நல்ல வெயில் நேரத்தில் தார்ச் சாலையைப் பார்த்தால் தூரத்தில் சாலையில் தெளிந்த நீர் தேங்கியிருப்பதுபோல் தோற்றமளிக்கும். சாலையில் வரும் வண்டிகள் எதிரே இருக்கும் கட்டிடங்கள் ஆகியவற்றின் பிம்பங்கள் கூட அதில் நன்கு பிரதிபலித்துத் தெரியும். ஆனால், அந்த இடத்தை நெருங்கிச் சென்று பார்த்தால் அப்படி நீர் ஏதும் அச்சாலையில் இருக்காது. ஆனால், அதுபோன்றே நீர், பிம்பத் தோற்றங்கள் தொலைவில் மீண்டும் தோற்றமளிக்கும். இவ்வாறு மாயத் தோற்றம் தருவதையே கானல் நீர் (Mirage) என அழைக்கிறோம்.

சாதாரணமாக ஒளி பிரதிபலிப்பின் மூலமே பிம்பங்கள் உண்டாக முடியும். இத்தகைய பிரதிபலிப்பு நீரில் உண்டாகும். ஆடியில் ஏற்படும். ஆனால் கடுமையான வெயிலின்போது தார்ச்சாலையிலும், பாலைவன மணலிலும் இத்தகைய பிரதிபலிப்புப் பிம்பங்கள் ஏற்படக் காரணம், அப்பகுதியிலுள்ள காற்று ஆகும். காற்றில் ஒளி ஊடுருவிச் செல்லும் இயல்புடையது. ஆனால், அதற்கு மேலேயுள்ள காற்றில் அவ்வளவு வெப்பமிருக்காது. இவ்வாறு வெப்பக் காற்றும் வெப்பமிலாக் காற்றும் அருகருகாக இருக்கும்போது, வெவ்வேறான வெப்ப நிலை காரணமாக அவற்றின் அடர்த்தியும் வேறுபடும். அப்போது அவற்றின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கவே பிம்பம் தெரிகிறது. இதுவே கானல் நீராகவும் அதில் பிம்பங்கள் தெரிவதாகவும் நமக்குத் தோன்றுகிறது.


காஸ்மிக் கதிர்கள் : விண் எங்கும் பரவியுள்ள காஸ்மிக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது இன்னும் முழுமையாக அறியப்படாமலே உள்ளது. இது குறித்துப் பன்னெடுங்காலமாகத் தொடர் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இக்கதிர்கள் இப்பூமியின் மீதும் கடல் மீதும் இரவு பகலாக இருந்துகொண்டே இருக்கிறது.

காஸ்மிக் கதிர்கள் அணுத் துகள்களாலானது என்பதே இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படும் செய்தியாகும். அவை பூமியின் காற்று மண்டலத்திற்கு அப்பால் வானில் பயணம் செய்வதாகக் கண்டறிந்துள்ளார்கள். இவைகளின் பயண வேகம் ஒளியின் வேகத்தை ஒத்ததாகும். காஸ்மிக் கதிர்களில் சில நமது காற்று மண்டலத்திற்குள் ஊடுருவி நிலப்பகுதியை வந்தடைவதும் உண்டு.

அணுத் துகள்களாலான காஸ்மிக் கதிர்கள் 'இளம் காஸ்மிக் கதிர்கள்’ (Primary Cosmic rays) என அழைக்கப்படுகிறது. இவை காற்றில் அணுவோடு மோதுகின்றன. இந்த மோதலினால் புதிய அணுத்துகள்கள் உருவாகின்றன. இவையும் மிகு வேகத்தில் இளம் அணுத்துகள் பயணம் செல்லும் அதே திசையில் செல்கின்றன. இந்தப் புதிய அணுத் துகள்கள், இரண்டாந்தர காஸ்மிக் கதிர்கள் (Secandary Cosmic rays) என அழைக்கப்படுகின்றன. இவை மீண்டும் மற்ற அணுக்களோடு மோதுகின்றன. இதன்மூலம் அதிக அளவில் புதிய துகள்களை