பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கிரகங்கள்

உருவாக்குகின்றன. இவ்வாறு மாபெரும் ஒளியலை மழையாகப் பூமியை இக்கதிர்கள் தாக்குகின்றன. இவ்வாறு ஒரு புரோட்டான் எனப்படும் அணுவின் மையத்திலுள்ள நேர்மின், விண் வெளியிலிருந்து வெளிப்பட்டு, ஆயிரம் மீட்டர் பரப்பளவை ஒளிக்கதிர்களால் நிரப்புகிறது.

இத்தகைய காஸ்மிக் கதிர்களின் மாபெரும் தாக்குதல்கள் பூமியின்மீது இடையறாமல் நிகழ்ந்து வந்தபோதிலும் நமக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதே தாக்குதல் இன்று நேற்றல்ல, இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தின் மீது ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. ஆனால், அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தக் காஸ்மிக் கதிர்களின் தோற்றுவாய் எது என்பது இன்னும் விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத மர்மமாகவே இருந்து வருகிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் விண் வெளி ஆய்வுகளின் விளைவாக ஒரு வேளை இந்த மர்மம் துலக்கம் பெறலாம்.


கியூரி தம்பதியர் : அறிவியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்களான பியர் கியூரியும் மேரி கியூரியும் தம்பதியர் ஆவர். இவர்கள் இருவரும் அரிய கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசை இணைந்து பெற்றனர். தன் கணவர் பியர் கியூரியின் மறைவுக்குப்பின், மேரி கியூரி தன் கண்டுபிடிப்புக்காக மேலும் ஒரு முறை நோபல் பரிசு பெற்றார்.

பியர் கியூரி ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். இளமை தொட்டே கணிதத்தில் பேரார்வம் கொண்டிருந்த இவர் அறிவியல் ஆராய்ச்சியில் முனைப்பும் காட்டினார். இயற்பியல் பள்ளித் தலைவராக இவர் பணியாற்றியபோது போலந்து நாட்டவரான மேரி இவரது மாணவியானார். இவரும் அறிவியல் ஆராய்ச்சியில் பெரும் நாட்டமுடையவராயிருந்தார். சோதனைச் சாலையில் பியர் கியூரிக்கு மேரி உதவியாளராகப் பணியாற்றினார். மனமொத்த இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதியர் ஆயினர். இவர்கள் இருவரும் மேற்கொண்ட கதிரியக்க ஆராய்ச்சி இவர்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

ஒரு விபத்தில் பியர் கியூரி இறந்தார். தன் துணைவரை இழந்த மேரி கியூரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். ரேடியத்தையும் கதிர் இயக்கத்தையும் பற்றிய பல புதிய கண்டுபிடிப்புச் செய்திகளை உலகுக்கு வழங்கினார். இதற்காக இவருக்கு 1911ஆம் ஆண்டு மீண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சோதனைக்கூடத்தில் கியூரி தம்பதியர்

நீண்ட காலம் கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததால் சோகை நோய்க்கு ஆளாகி இறக்க நேர்ந்தது. இவரது புதல்வி ஜூலியட் கியூரியும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆவார்.


கிரகங்கள் : விண்வெளியில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் கோள்கள் ஒன்பது இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அவையாவன: புதன் (Mercury), வியாழன் அல்லது குரு (Jupiter), சனி (Saturn), யுரெனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune), புளூட்டோ (Pluto) பூதி ஆகியனவாகும். இவற்றை முதன் முதலில்