பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கிராமபோன்

கிரகணம்' ஆகும். இவை நடுப்பகுதி அல்லது முழுமையான கிரகணமாகவும் அமைவதுண்டு, கிரகணங்கள் உலகின் எப்பகுதிக்கு நேராக ஏற்படுகிறதோ அப்பகுதி மக்களுக்கு மட்டுமே கிரகணம் தெரியும். சந்திர, சூரிய கிரகணம் போன்றே வேறுசில கிரகங்களிலும் கிரகணம் ஏற்படுவதுண்டு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


கிரஹாம், தாமஸ் : இவர், புகழ்பெற்ற வேதியியல்ஆய்வாளராவார்.இவர் இளமைதொட்டே அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். ஆனால் இவரது தந்தையோ இவரை கிருத்துவ சமயப் போதகராக்கப் பெரிதும் விரும்பினார். இதனால் இவர் உயர் கல்வி பெற இவர் தந்தை உதவ மறுத்துவிட்டார். இவராகவே, மற்றவர்கட்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலமும் கட்டுரைகள் எழுதுவதன் மூலமும் ஓரளவு வருமானம் பெற்றுத் தன் வாழ்க்கையை நடத்தினார். ஆயினும், இவர் தன் வேதியியல் ஆய்வு முயற்சிகளைத் தொடர்ந்து செய்தார். அதன் விளைவாகப் பல புதிய ஆய்வுக் கருத்துக்களை வெளிப்படுத்தினார். இதனால் வெகு விரைவிலேயே இவர் ராயல் கழக உறுப்பினராக்கப்பட்டார். 1887இல் லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரானார்.

இவரது ஆய்வில் முக்கிய இடம் பெற்றது வாயு பரவல் பற்றிய ஆய்வாகும். வாயுக்கள் திரவங்களால் உட்கொள்ளப்படுவதையும் பரவுதலையும் சவ்வூடு பரவல் தன்மைகளையும் விரிவாக ஆய்ந்து விளக்கினார். இதுவே, பின்னர், 'கிரஹாம் வாயு பரவல் விதி’ என்ற பெயரால் வழங்கப்படலாயிற்று. கரைசல்கள், கூழ்நிலை, படிக நிலைகளில் அமைவதைக் கண்டறிந்து கூறினார். இவரது கண்டுபிடிப்பின் பயனாக ‘கூழ்ம' மாகிய கொலாயிடு ஆராய்ச்சி வளர்ச்சி பெறலாயிற்று. குண்டுக்கு மாறாக பாதரசத் தொட்டியைக் கொண்டு 'ஈடு செய்யும் பெண்டுலம்' (Compensated pendulam) ஊசலை முதன் முறையாக இவரே அமைத்தார்.


கிராபைட் : நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில் கிராபைட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். 'கிராபோ என்ற சொல்லுக்கு “நான் எழுதுகிறேன்’ என்பது பொருளாகும். கிராபைட் எழுது பொருளாகப் பயன்பட்டதன் காரணமாக இப்பெயரைப் பெற்றதெனலாம்.

இது ஒரு கார்பனின் புறவேற்றுமை இயைபாகும் (Allotropis modification). இதன் அமைப்பில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மூன்று கார்பன் அணுக்களோடு சக வலு பிணைப்பில் ஈடுபட்டு அறுகோண தட்டை அமைப்பினை உடையது. இக்காரணத்தால் இது வழுக்குத் தளப் பண்பினைப் பெற்றிருக்கிறது.

கிராபைட் இயற்கையாகப் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கம்பர்லாந்து, பொஹீமியா, சைபீரியா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் கிடைக்கிறது. மற்ற நாடு களைவிட இந்தியாவில் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் கிராபைட் இயற்கையாகக் கிடைக்கிறது. உலகிலேயே சிறந்த கிராபைட் இலங்கையிலிருந்து கிடைக்கிறது .

கிராபைட் செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. செங்கல்லாலான மின் உலையில் மணலையும் தூளாக்கப்பட்ட கல் கரியையும் 24 மணி நேரம் மிகு வெப்ப நிலையில் சூடாக்கப்படும். அப்போது அதிலிருந்து சிலிக்கன் கார்பனும் கார்பன் மோனாக்சைடும் வெளிப்படுகின்றன. மிகு வெப்ப நிலையில் சிலிக்கன் வாயுவடிவில் வெளியேறவே அங்கு கிராபைட் தங்குகிறது. இச்செயற்கைக் கிராபைட்டின் விலை அதிகமாகும்.

கிராபைட் மிருதுத் தன்மையுடையதாகும். கருநிறமுடையது. பளபளப்பானது. வெப்பத்தையும் மின்காந்தத்தையும் எளிதாகக் கடத்தவல்லது. இதை இரும்பில் பூசினால் துருப்பிடிக்காது. கிராபைட்டைக் கொண்டு இரும்பை மெருகடையச் செய்யலாம். அதிக வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடையதாதலால் மூலங்கள் செய்யக் கிராபைட் பயன்படுத்தப்படுகிறது. கிராபைட்டைக் கொண்டு காகிதத்தில் எழுதும் பென்சில்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.


கிராமபோன் : ஒலியைப் பதிவு செய்த தட்டுக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி திரும்பத் திரும்ப அதே ஒலியை-இசையைக் கேட்கப் பயன்படும் கருவியே 'கிராமபோன்’ என அழைக்கப்படுகிறது. இந்த அரிய கருவியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அமெரிக்க விஞ்ஞானி ஆவார். தொடக்கத்தில் இக்கருவிக்கு இவர் இட்ட பெயர் 'போனோகிராப்’ என்பதாகும்.