பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குளோரஃ பில்

141

யாகும். மண்பானை நீர் எவ்வாறு விரைந்து குளிர்ச்சியடைகிறது? மண்பானையின் கண்ணுக்குத் தெரியாத நுண் துளைகள் ஏராளமாக உண்டு. அந்நுண் துளைகளின் வழியே கசியும் நீர் ஆவியாகிறது. அவ்வாறு ஆவியாவதற்கு வேண்டிய வெப்பத்தை பானையினின்றும் பெறுவதால் பானை நீரின் வெப்பம் குறைய நீர் குளிர்ச்சியடைகிறது.

இந்த அடிப்படையில் அமைந்திருப்பதே குளிர்பதனப் பெட்டி. நவீன சாதனமாக அமைந்துள்ள இப்பெட்டி மின் விசையால் இயங்குகிறது. இப்பெட்டியின் மேற்பகுதியில் சுருள் குழாய் ஒன்று உண்டு. ஆவியாகக் கூடிய திரவம் அக்குழாய் வழியே செல்லும். ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தைப் பெட்டிக்குள் இருக்கும் பொருள்களிலிருந்து பெறுகிறது. இதனால் வெப்பத்தை இழந்த பொருட்கள் குளிர்ச்சியடைகின்றன, ஆவி

குளிர்பதனப்பெட்டி

யான திரவத்தை மீண்டும் திரவ நிலைக்கு மாற்றும் மின்சாதன அமைப்பு அப்பெட்டியிலேயே இருக்கிறது. இவ்வாறு திரவம் ஆவியாவதும் மீண்டும் திரவ நிலைக்கே மாறுவதும் தொடர்ந்து நிகழும் தொடர் நிகழ்ச்சியாகும். இதனால் பெட்டிக்குள் எப்போதும் தாழ்ந்த வெப்பமே நிலைக்க நேரிடுகிறது. உள்ளிருக்கும் பொருள்களும் ஒரே மாதிரி குளிரான நிலையில் இருக்கிறது.

குளிர் பானங்கள் தயாரிக்கவும், காய்கறிகள் பழங்கள், வெண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற பொருட்கள் கெடாமல் இருக்கப்பயன்படுகிறது. சில வகை மருந்துகளும் கெடாமலிருக்க இதனுள் வைக்கப்படுகிறது.


குளோரஃபில் : தமிழில் இது 'பச்சையம்’ (Chlorophyl) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தாவரங்களின் இலைகள் பச்சை நிறமாக இருப்பது இயல்பாகும். இத் தாவரப்பச்சை உலக வாழ்வுக்கு மிக இன்றியமையாத அவசிய அம்சமாக அமைந்துள்ளது. எவ்வாறெனில், பச்சையமாகிய இந்த பச்சை வண்ணத்தைக் கொண்டுதான் தாவரங்கள் மண்ணிலிருந்தும் காற்றிலிருந்தும் போதிய சத்துப் பொருட்களையும் வேண்டிய அளவு தயாரித்துக்கொள்கின்றன. இத் தாவரங்களை உண்ணும் பிற உயிர்களுக்கும் இச்சத்துப் பொருட்களை வழங்கி அவற்றின் உயிர் வாழ்வை வளமாக்குகின்றன. இவ்வாறு தாவரங்கள் பச்சையம் மூலம் சத்துப் பொருட்களை உருவாக்கவில்லை யென்றால் இவ்வுலகில் உயிரினங்களே வாழமுடியாமல் போய்விடும். நுணுகி ஆராய்வோமானால் அனைத்து உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமைவது பச்சையம் தயாரிக்கும் உணவே என்பது புலனாகும்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரப் பொருட்கள் உணவாவதன் மூலம் இவை அடிப்படை ஆதாரமாய் அமைகின்றன. தாவரத்தின் இலைகள், தண்டு, பூக்களில் உள்ள சிறுசிறு செல்களாகிய நுண்ணறைகளில் இப்பச்சையம் அடங்கியுள்ளது. இப்பச்சையத்தின் துணை கொண்டு தாவரத்தின் திசுக்கள் சூரிய ஒளியிலிருந்து உயிர்ச்சத்தை உறிஞ்சிப் பெறுகின்றன. இதுவே 'ஒளிச்சேர்க்கை’ என வழங்கப்படுகிறது.

சிலவகைத் தாவரங்களுக்குப் பச்சையம் இருப்பதில்லை. காளான் வகைகளுக்குப் பச்சையம் என்பது இல்லை. இவை வேறு வகையில் தங்களுக்கு வேண்டிய சத்துப் பொருளைத் தயாரித்துக் கொள்கின்றன. மற்றத் தாவரங்களிலிருந்தோ அல்லது பிராணிகளிடமிருந்தோ தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களைப் பெற்றால், அத்தாவரங்கள் 'ஒட்டுயிர்கள்’ (Parasites) என அழைக்கப்படும். கெட்டுப்போன தாவரங்கள், பிராணிகளிடமிருந்து சத்துப் பொருளைப் பெறும் தாவரங்கள் மட்குண்ணி அல்லது சாருண்ணி (Sapropeytes) என அழைக்கப்படும்.