பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கூட்டன்பர்க்


குளோரோஃபார்ம் : இது ஒரு மயக்க மருந்தாகும். எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. கனமான, நிறமற்ற, இனிய மணமுள்ள உணர்ச்சி அகற்றும் நீர்மமாகும்.

குளோரோஃபார்ம் 1831ஆம் ஆண்டிலேயே லிபிக், சவ்பீரான் எனும் இருவராலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதிலும், இதை ஒரு மயக்க மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்பதை சிம்ப்சன் என்பார் 1848இல் கண்டுபிடித்தார். வெளுக்கும் தூளையோ, சோடியம் ஹைப்போகுளோரைடுக் கரைசலையோ ஆல்கஹால் அல்லது அசிட்டோனுடன் கலந்து குளோரோஃபார்ம் தயாரிக்கலாம். குளோரோ ஃபார்மை மேலும் மேலும் தூய்மையாக்கியே மயக்க மருந்தாகப் பயன்படுத்த முடியும்.

குளோரோஃபார்ம் எளிதில் நீரில் கரையாது. ஆனால், ஆல்கஹால், ஈதர் போன்ற கரிமக்கரைப்பான்களில் எளிதாகக் கரையும். இதை இறுக்கமாக மூடப்பட்ட வண்ணக் கண்ணாடி பாட்டில்களில் வைத்திருப்பார்கள். ஏனெனில் வெளிச்சத்தில் வைத்திருந்தால் இது தானாகவே ஆக்சிகரணித்து ஹைட்ரஜன் குளோரைடாகவும் நச்சுத்தன்மைமிக்க பாஸ்ஜீன் வாயுவாகவும் மாறிவிடும். எனவே தான் இத்தகைய பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது.

மருத்துவத்தில் மயக்க மருந்தாகப் பயன்படுவதோடு சிலவகை தைலங்கள் இரத்தத்தில் ஒரு பகுதியான சீரத்தைப் பாதுகாக்கவும் குளோரோஃபார்ம் பயன்படுகிறது. மெழுகு, கொழுப்பு, எண்ணெய்கள், ரெசின்கள், ஆல்கலாய்டுகள் ஆகியவற்றிற்கு இது சிறந்த கரைப்பானாகும். நச்சுத்தன்மையும் மயக்க முண்டாக்கும் தன்மையுமுள்ளதால் இதனை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

ஒளி, காற்று முன்னிலையில் குளோரோஃபார்ம் தன்னிச்சையாக நச்சுத் தன்மையான பாஸ்ஜீன் (Phosgene) என்னும் வேதிப் பொருளாக மாறுகிறது. எனவேதான் குளோரோஃபார்ம் ஒளி ஊடுருவா பழுப்பு வண்ண பாட்டில்களில் முழுமையாக நிரப்பப்பட்டு வைக்கப்படுகிறது.


குளோரின் : நோய் உண்டாக்கும் பாக்டீரிய கிருமிகளைக் கொல்வதற்கான ஒருவகை நச்சு வாயு குளோரின் ஆகும். இஃது குடிநீரில்உள்ள பாக்டீரியாக் கிருமிகளைக் கொல்ல சிறிய அளவில் குடிநீரில் கலக்கப்படுகிறது. இதனால் நமக்கு ஆபத்து ஏதும் இல்லை. கலக்கும் அளவு அதிகமானால் தீங்கு ஏற்படும். குளோரின் வாயுவை நீண்ட நேரம் சுவாசிக்க நேர்ந்தால் இறக்க நேரிடும்.

1774இல் சீலி (Scheele) என்பாரால் இத்தனிமம் கண்டறியப்பட்டது. இதன் பசுமை கலந்த மஞ்சள் நிறம் குளோராஸ் என்பதால் (Chloros - greenish yellow) இஃது குளோரின் என அழைக்கப்படுகிறது. இதனை தனிமம் என 1800இல் டேவி (Dewy) என்பாரால் உறுதி செய்யப்பட்டது.

குளோரின் ஒரு தனிமம் ஆகும். இது பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையதாகும். மற்ற தனிமங்களோடு கலந்து கிடைக்கும் இதைத் தனியே பிரித்தெடுத்துப் பயன்படுத்துவார் கள், எரிமலை கக்கும் வாயுவில் தனி குளோரின் உண்டு. காற்றினும் இரு மடங்கு கணமுள்ளது குளோரின்.

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பில் பெருமளவில் குளோரின் உள்ளது. நமக்குத் தேவையான குளோரினில் பெரும் பகுதி உப்பிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது. உப்புக் கரைசலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் சோடியமும் குளோரினும் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. குளோரின் வாயுவை எளிதாகத் திரவமாக்கலாம்.

துணி, காகிதம் முதலானவைகளை வெண்மையாக்குவதற்கும் குளோரின் பெரிதும் பயன்படுகிறது. குடிநீரைத் தூய்மைப்படுத்தவும் சாயப் பொருட்கள், வெடிமருந்துகள் செய்யவும் எண்ணெய் சுத்திகரிப்புக்கும் உலோக வேலைகளுக்கும் குளோரின் பயன்படுகிறது.


கூட்டன்பர்க் : இன்று அழகான வடிவில் அச்செழுத்துக்களை வார்த்து அச்சிட்டுப் படித்து மகிழ்கிறோம். இத்தகைய அச்செழுத்துக்களை உருவாக்கும் முறையை முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கூட்டன்பர்க் என்பவராவார்.

இவர் ஜெர்மன் நாட்டிலுள்ள மாரண்ட்ஸ் எனுமிடத்தில் 1400ஆம் ஆண்டில் பிறந்தார். சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களால் இவரும் இவரது தாயாரும் 1420ஆம் ஆண்டில் சொத்து சுகங்களை இழந்து பல்வேறு நாடுகளில் அலைய வேண்டியதாயிற்று.