பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தோல் பதப்படுத்தல்

மடியச் செய்து வெளியேற்றுகிறோம். நல்ல வேளையாக அதே சமயத்தில் நாள்தோறும் இலட்சக்கணக்கான பதிய செல்கள் கீழடுக்குத் தோலால் உருவாக்கி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடல் தோல் எப்போதும் இளமைப்பாங்குடனேயே வைத்துக் கொள்ளப்படுகிறது.

நம் தோலில் 80 அடுக்குக் கொம்பு செல்கள் (Horm Cell) இருக்கின்றன. ஒவ்வொரு நேரமும் கழுவுவதாலோ அல்லது துடைப்பதனாலோ தோலின் மேலடுக்கை அப்புறப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அந்த இடம் உடனே நிரப்பப்பட்டு விடுகிறது. நாம் ஒரு போதும் தோலின் அனைத்து அடுக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அடித்தோலிலிருந்து புதிய புதிய செல்கள் மேல் நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது.


தோல் நிறம் : மனிதர்களின் தோல் நிறம் ஒரே மாதிரி இல்லை. வட ஐரோப்பாவைச் சார்ந்தவர்கள் வெள்ளை நிறமுடையவர்களாக உள்ளனர். அதேசமயத்தில் மேற்கு ஆஃப்ரிக்காவிலுள்ளவர்கள் கருமை நிறத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென் கிழக்காசியாவைச் சார்ந்தவர்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடையவர்களாக உள்ளனர். மற்ற நாடுகளில் வாழ்வோர் இந்நிறங்களுக்கு அப்பாற்பட்ட புது நிறங்களாகவும் மாநிறமாகவும் இருக்கின்றனர். உலகெங்குமுள்ள மனித குலம் முழுமையும் நூற்றுக்கு மேற்பட்ட நிறமுடையதாக அமைந்துள்ளது.

நம் உடல் தோலில் ஏற்படும் வண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் நம் உடலிலும் தோலிலும் ஏற்படும் தொடர் வேதி வினைகளேயாகும். நம் உடல் தோலில் குறிப்பிட்ட வண்ண அடிப்படை கொண்ட நிறஊக்கி (Chromogens) உளது. இந்த நிற அடிப்படையில் உயிர் விளையூக்கிச் செயல் மூலம் (Enzyme) இறுதியில் தோல் ஒரு குறிப்பிட்ட அடிப்படை வண்ணத்தை முழுமையாகப் பெறுகின்றது.

சிலருக்குத் தோலில் அடிப்படை நிறம் ஏது மில்லாமல் இருக்கும். இன்னும் சிலருக்கு அடிப்படை நிறம் இருந்தாலும் நிற ஊக்கியில் உயிர் விளையூக்கிச் (Enzyme) செயல் சரிவர ஏற்படாது போகும். அத்தகையவர்களின் நிறம் வெளிர் நிறமாக (Alling) அமைந்துவிடும். இவ்வெளிர் நிறம் எந்த வண்ணத்திலும் சேராததாகும். இத்தகைய வெளிர் நிறமுடையவர்கள் உலகெங்கும் உண்டு. ஆஃப்ரிக்காவில் இத்தகைய வெளிர் நிற (Albino) மனிதர்கள் வெள்ளையர்களையும்விட வெண்மை நிறத்தவர்களாகத் தோற்றமளிப்பர்.

மனிதர்களின் தோல் நான்கு நிற அடிப் படைகளைக் கொண்டதாக அமைவது இயல்பு. அவை வெண்மை, மஞ்சள், கருப்பு, சிவப்பு மற்றும் இவைகளின் கலவையால் உண்டாகும் புது நிறம்.

தோலைக் கருப்பாக்கும் தன்மை சூரியனின் வெப்பக் கதிர்களுக்கு உண்டு. எனவே, வெப்ப நாடுகளில் வாழ்வோரின் தோல் கரு நிறமுடையதாக இருக்கிறது. சில நாட்களுக்கு சூரிய வெப்பக்கதிர்கள் படும்படி இருந்தால் கதிரவனின் புற ஊதாக்கதிர்கள் தோலில் கரு நிறத்தை உருவாக்கிவிடும்.

தோலின் நிறம் மெலானைன் (Melanine) என்றும் நிறந்தரும் பொருளைப் பொறுத்து அமையும்.


தோல் பதப்படுத்தல் : நீண்ட நெடுங்காலமாகவே ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல் மனிதர்களுக்குச் செருப்பு, குதிரைச் சேணம், நீர்ப்பை முதலானவைகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. இதற்காக சிறந்த விலங்குகளின் தோலை உரித்து, அதைப் பதனிட்டு, பின் வேண்டிய பொருட்களைச் செய்து கொள்வர்.

இறந்த விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் கெட்டுப் போகா வண்ணம் பாதுகாக்கவே பதப்படுத்தப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு பதப்படுத்தப்பட்ட தோல் எகிப்து நாட்டில் இன்னும் கெடாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து முறையாகப் பதப்படுத்தப்படும் தோல் நீண்ட காலத்திற்குக் கெடாமல் பாதுகாக்க முடியும் என்பது தெளிவாகிறது.

இன்று தோலின் உபயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆடு, மாடு, குதிரை மட்டு மல்லாது பன்றி, பாம்பு, உடும்பு, நெருப்புக் கோழி போன்றவற்றின் தோல்களைப் பதப்படுத்தி பெண்கள் பயன்படுத்தும் அழகிய பைகள், கடிகாரப் பட்டைகள், இடுப்பில் கட்டும் வார்ப்பட்டைகள், மெல்லிய தோலிலான உடைகள் தயாரிக்கப்படுகின்றன.