பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அசிட்டேட் செல்லுலோஸ்

கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றின் மலத்துளை வழியே ஒருவகை இனிய நீர் சுரக்கும். அதை உண்ண எறும்புகள் இவற்றை நாடி வரும். இவை அகவுணிகளுக்குப் பாதுகாப்பாபாகவும் பல செடிகொடிகளுக்குப் பரவவும் உதவுகின்றன.

இவை கூர்மையான வாயுறுப்புக்கள் மூலம் சாற்றை உறிஞ்சுகின்றன. குளிர்காலத்தில் இவற்றின் குஞ்சுகள் வெளிவருகின்றன.

செடி கொடிகளுக்கு மிகுந்த சேதத்தை உண்டாக்கும் அசுவுணிப் பூச்சிகளை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. சிலந்திபோன்ற பூச்சிகள் அசுவுணிகளை உண்டு அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

அசெட்டிலின் : இது ஒரு கரிமச் சேர்மமாகும். நிறைவுறா ஹைட்ரோ கார்பனாகும். இவ்வாயு 1890K வெப்ப நிலையில் நீர்மமாகிறது. நீர்ம நிலை அசெட்டிலின் மிகவும் தீவிரமாக வெடிக்கும் தன்மை வாய்ந்தது. கால்சியம் கார்பைடுடன் நீரைச் சேர்த்து அசெட்டிலின் வாயு தயாரிக்கப்படுகிறது. தூய நிலையில் இவ்வாயுவுக்கு மணமோ நிறமோ இல்லை. ஆயினும், அசுத்தம் கலந்த நிலையில் ஒரு வகை நெடி தரும் மணம் இதற்கு உண்டு. சுண்ணாம்பையும் கல்கரியையும் கலந்து மின்னுலையில் சுட்டு கால்சியம் கார்பைடு தயாரிக்கப்படுகிறது.

இதை ஆக்சிஜன் வாயுவுடன் தகுந்த விகிதத்தில் கலந்து எரித்தால் 88000-க்கு மேல் வெப்பம் பெற முடியும். வெப்பந்தரும் வெள்ளிய ஒளியையும் பெற இயலும். இவ்வாறு பெறப்படும் ஒளி ஆக்சி-அசெட்டிலின் சுடராகும். இதைக் கொண்டு ஊது குழல் மூலம் செலுத்தி கடின உலோகத் தகடுகளை வெட்டவும் உலோகத்துண்டுகளை இணைக்கவும் முடியும். ஐந்து அடி கனமுள்ள இரும்புத் துண்டுகளைக்கூட வெண்ணெயை வெட்டுவதுபோல் வெட்டியெடுக்க முடியும்.

அசெட்டிலின் வாயுவிற்கு வெடிக்கும் தன்மை உண்டு. எனவே, தேவைப்படும்போது மட்டும் கால்சியம் கார்பைடுடன் நீர் கலந்து அசெட்டிலின் வாயு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து அசெட்டால்டிஹைடு, அசெட்டிக் அமிலம், எத்தில் ஆல்கஹால், மோட்டார் எரிபொருள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவைகளைக் கொண்டு செயற்கை பட்டு, ரப்பர் தரை விரிப்புகள், நீரால் பாதிக்கப்படாத துணிகள், நீரிடையே செல்லும் தந்திக் கம்பிகளுக்கான பிளாஸ்டிக் மேலுறைகள் உருவாக்கப்படுகின்றன.

அசெட்டிலின் வாயுவை ஹைட்ரோ-குளோரிக் அமிலத்துடன் கலந்து பலவகை பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. 'பாலிலினைல்' (P.v.C.) என அழைக்கப்படும் பொருள் பிளாஸ்டிக் மின் கம்பிகளுக்கு மேலுறையாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறை போன்றவை தயாரிக்கப்படுகிறது. அசெட்டிலினை ஹைட்ரஜனுடன் சேர்த்து 'எத்திலீன்' வாயு தயாரிக்கப்படுகிறது. இதைக் கொண்டு 'பாலிதின் பிளாஸ்டிக்’ வகைகள் உருவாக்கப்படுகின்றன. அசெட்டிலினிலிருந்து செயற்கை ரப்பர் தயாரிக்கப்படுகிறது.

அசெட்டிலின் வாயுவை 1859ஆம் ஆண்டில் பெர்தலோ என்ற ஃபிரெஞ்சு நாட்டு அறிவியல் ஆய்வாளர் கண்டறிந்தார்.

அசிட்டேட் செல்லுலோஸ் : இது ஒருவகை செயற்கை இழையாகும். இது 'இயற்கை உயிர்மம்’ என்று கூறப்படும் செல்லுலோஸிலிருந்து உருவாக்கப்படுகிறது. இதனை ‘அசிட்டேட் ரேயான்’ என்று அழைப்பதும் உண்டு. மென்மையான மரக்கூழுடன் குட்டை இழைப்பருத்தியையும் அத்துடன் அசெட்டிக் அமிலத்தையும் கலந்து வினைபுரியச் செய்வர். இதன்மூலம் செல்லுலோஸ் 'அசெட்டேட்’ எனும் புதிய சேர்மப்பொருள் கிடைக்கும். இதிலிருந்து செயற்கை இழை உருவாக்கப்படுகிறது. இவ்விதம் பெறப்பட்ட விளைபொருள் 'செலினேஸ் பட்டு' என அழைக்கப்படுகிறது. இந்த இழை நைலான் இழையைவிட வலுக் குறைந்ததாகும். இவ்விழையைக் கொண்டு ஆடை நெய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான சேலைகள் அதிகம் நெய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது விலை மலிவானதாகும்.

அசிட்டேட் இழை ஆடைகள் பளபளப்பானவை. ஆனால், இவற்றை சலவைப் பெட்டி கொண்டு தேய்த்தால் இழை உருகி விடும். புகைபோன்றவை பட்டால் இதன் நிறம் மங்கிவிடும்.