பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

நைலான்


நைட்ரஜன் : நம்மைச் சுற்றியுள்ள காற்றில் அதிக அளவில் இருப்பது நைட்ரஜன் வாயுவாகும். இஃது சுமார் எண்பது சதவிகிதம் வரை இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். மீதமுள்ளவை பிராணவாயுவாகும். மிகக் குறைந்த அளவில் கரியமிலவாயு போன்றவை உண்டு. நைட்ரஜன் நிறமோ மணமோ இல்லாத தனிமம் ஆகும். நைட்ரஜன் சாதாரண அழுத்தத்தில் குறைவாகவும் மிகுந்த அழுத்தத்தில் அதிகமாகவும் நீரில் கரையும் தன்மை கொண்டது. நைட்ரஜனுக்குத் தனித்து எரியும் தன்மை இல்லை. பிராணவாயுவிலுள்ள எரிக்கும் வீரியத் தன்மையை இது குறைத்துவிடுகிறது.

இதை முதன்முதலில் 1772இல் ஷிலே எனும் சுவீடன் நாட்டு அறிவியல் ஆய்வாளர் கண்டறிந்தார். பின்னர், ஷாப்ட்டால் எனும் ஃபிரெஞ்சு அறிவியல் அறிஞர் 'நைட்டர்’ எனும் வெடியுப்பில் நைட்ரஜன் அதிகம் காணப்பட்டதால் இதற்கு 'நைட்ரஜன்' எனப் பெயரிட்டார். அப்பெயராலேயே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இஃது காற்றில் மட்டுமல்லாது மண்ணிலும் உள்ளது. மண்ணிலிருந்து நைட்ரேட்டாகவும் அம்மோனியக் கூட்டாகவும் கிடைக்கிறது. இறைச்சியிலும், பால், பாலடை போன்றவைகளிலிருந்தும் நைட்ரஜன் சத்தைப் பெறுகிறோம். மற்றும் தாவரப் பொருட்களான அவரை, துவரை போன்றவைகளிலிருந்தும் நம்மால் பெற முடிகிறது. இத்தாவரங்கள் மண்ணிலுள்ள நைட்ரேட் எனும் உப்புச் சத்தை ஈர்த்து புரோட்டினாகத் தந்து உதவுகின்றன.

நைட்ரஜன் தனிப்பொருளாகக் கிடைப்பதைவிடக் கூட்டுப் பொருளாகவே அதிக அளவில் கிடைக்கிறது. உணவுப் பொருட்களிலும் மருந்துகளிலும் நைட்ரஜன் கூட்டுப் பொருளாகவே அமைந்துள்ளது. மண்ணிற்கு நைட்ரஜன் உரத்தைப் போடுகிறோம். அதனைப் பெற்றுச் செழிப்பாக வளரும் தாவரப் பொருட்களிலிருந்து நைட்ரஜன் கூட்டுப் பொருளாகப் பெறுகிறோம்.

நைட்ரிக் அமிலத்தைக் கொண்டு வெடி மருந்துகள், சாயங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நைட்ரஜனும் ஹைட்ரஜனும் சேரக் கூட்டுப் பொருளாக அம்மோனியா வாயு கிடைக்கிறது. இது பொருட்களைப் பதனப்படுத்தப் பயன்படுகிறது. மற்றும் உரம், சாயம், மருந்து உற்பத்தி செய்யத் துணைபுரிகிறது. எரிபொருளாகவும் அம்மோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டுகளைச் செலுத்தவும், வெடி மருந்துகளை வெடிக்கச் செய்யவும் அம்மோனியா பயன்படுகிறது.

காற்றில் உள்ள நைட்ரஜன் கரையும் நைட்ரஜன் சேர்மமாக மாற்றம் பெறுவது "நைட்ரஜன் நிலை நிறுத்தம்" (Nitrogen Fixation) என அழைக்கப்படுகிறது. இது செயற்கையாகவும் நடத்தப்படுகிறது. இயற்கையாகவும் நடக்கிறது.

காற்றிலுள்ள நைட்ரஜன், “நைட்ரஜன் நிலை நிறுத்தலுக்குப் பின்னர்“ மீண்டும் சிதைந்து நைட்ரஜன் தனிமமாக மாற்றப்படுகிறது. இதுவே “நைட்ரஜன் சுழற்சி“ (Nitrogen Cycle) என அழைக்கப்படுகிறது. இதுவே நமது உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத அமினோ அமிலங்களின் இயக்கத்திற்குக் காரணம் ஆகும்.


நைலான் : இது ஒரு பாலியமைடு (Polyamide) எனப்படும் பல்லின சேர்மமாகும். இதன் அதிக உறுதிக்கு இச்சேர்மத்தில் காணும் ஹைட்ரஜன் பிணைப்பாகும். பட்டு நூல் போன்று செயற்கை முறையில் உருவாக்கப்படும் இழைகள் 'நைலான்’ என்று அழைக்கப்படுகிறது. நைலான் நூலிழைகளை முதன் முதல் உருவாக்கியவர் புகழ் பெற்ற வேதியியல் அறிஞரான கரோர்ஸ் எனும் அமெரிக்கராவார். இவர் இதை 1988ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இன்றைய வாழ்வில் நைலான் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது

நைலான் நிலக்கரி, நீர், காற்று மற்றும் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகிறது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகிய தனிமங்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுவதே நைலான். நைலான் பொடிகளைக் குறிப்பிட்ட அளவில் வெப்பப்படுத்தினால் உருகுநிலையை அடையும். அதை நுண்துளைகள் வழியே வெளியேற்றினால் நூலிழைகளாக வெளிவரும். வெப்பப் பசையோடு வெளிப்படும் இவ்விழைகள் காற்றுப்பட்டவுடன் இறுகிக் கெட்டிப்படுகின்றன். இந்நைலான் இழைகள் உறுதிமிக்கவையாகும். பருத்தி, பட்டு நூலிழைகளைவிட நைலான் நீண்ட காலத்திற்கு நைவடையாமல்