பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோய் எதிர்ப்புச்சக்தி

197

உழைக்கும் தன்மையுடையது. இந்நூலிழைக்கு நீரை உறிஞ்சும் தன்மை மிகமிகக் குறைவு. நீர்ப்பட்டாலும் விரைந்து உலர்ந்து விடும். எனவே, நைலான் பொருட்களை நீரால் சுத்தம் செய்வது மிக எளிது.

நைலான் இழைகள் பலவற்றைச் சேர்த்துக் கயிறாகவோ, ஊடும் பாவுமாக அமைத்து ஆடை நெய்யவோ எளிதாக இயலும். எல்லா வகையான ஆடைகளும் நைலான் இழைகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. நைலான் நூலிழைகளைக் கொண்டு காலுறைகளும் உள்ளாடைகளும் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. விமானத்திலிருந்து குதிக்கப் பயன்படும் பாராஷூட்டுகள் எனப்படும் விமானக்குடைகள் செய்யவும் திரைச்சீலைகள், விரிப்புகள், கித்தான்கள், வலைகள் செய்யப் பெருமளவு பயன்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது அறுவைப் பகுதிகளைத் தைக்கவும் நைலான் நூலிழைகளே பயன்படுத்தப்படு கின்றன.


நொதித்தல் : மிகப்பெரிய சிக்கலான அமைப்பினை உடைய கரிமமூலக்கூறுகள் (Organic Molecules) என்ஸைம்களின் உதவியால் சிறிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை நொதித்தல் என்று அழைக்கப்படுகிறது. நொதித்தலின்போது கரியமிலவாயு வெளிவிடப்படுகிறது. இது நொதித்தலைப் போன்ற தோற்றமுடையதால் இச்செயலுக்கு ‘நொதித்தல்’ என அழைக்கப்படுகிறது. இஃது ஆங்கிலத்தில் ஃபெர்மென்டேஷன் (Fermentation) என்று அழைக்கப்படுகிறது. நொதித்தல் என்பது ஈஸ்ட்டுகளாலும் பாக்டீரியாக்களாலும் உருவாக்கப்படுகிறது. கரிமப் பொருள்களான இவற்றில் நைட்ரஜன் உண்டு. இவை அளவில் குறைவாக இருப்பினும் நொதிப்பு வினையை நிகழ்த்தும் தன்மையுடையதாகும். இந்நொதித்தல் வினை மூலமே திராட்சைச்சாறு மதுவாக மாற்றமடைகிறது. பால் புளிப்பதும் சர்க்கரைப் பொருள் சாராயமாக மாறுவதும் இவற்றினாலேயே யாகும்.

ஈஸ்ட்டும் பாடீக்ரியாக்களும் உயிர்ப் பொருள்களாகும். இவை விரைந்து இனப் பெருக்கம் செய்கின்றன. அமிலத்தன்மை உள்ள பொருட்கள் ஈஸ்ட் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

தானிய வகைகளைக் கொண்டு மது தயாரிக்கப்படுகிறது. தானியமாக சர்க்கரைப் பொருளாக உருமாற்றம் பெறுகிறது. அதனுடன் ஈஸ்ட்டைக் கலக்கும்போது நொதித்தல் மூலம் மது தயாரிக்கப்படுகிறது. பாக்டீரியாவால் பால் புளித்து பின்னர் நொதிப்படைகிறது. இதே முறையில்தான் ஆல்கஹால், அசெட்டிக் அமிலமாக மாறுகிறது.


நோய் எதிர்ப்புச்சக்தி : நோய்க்கிருமிகளால் நம் உடலில் நோய் உண்டாகாதவாறு தடுக்கும் சக்தியே நோய் எதிர்ப்புச் சக்தியாகும் நோய் எதிர்ப்புச் சக்தி சிலர் உடம்பில் இயற்கையாக ஏற்பட்டிருக்கும். சிலர் செயற்கையாகத் தம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கிக் கொள்வதும் உண்டு. இதன் மூலம் குறிப்பிட்ட ஓரிரு நோய்களை அல்லது பல நோய்கள் நம் உடலைத் தாக்காதவாறு காத்துக்கொள்ள முடியும்.

ஒருவருக்கு நோய் ஏற்படவில்லை என்றால் அவர் உடலில் நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது என்பது பொருளாகும். நோய்க் கிருமிகள் பலவகைப்படும். ஒவ்வொரு வகைக் கிருமிகளும் ஒவ்வொரு வகை நோயை உண்டு பண்ணும். ஒருவருக்கு உடலில் ஒருவகை நோய்க் கிருமிகளை எதிர்த்து நிற்கும் சக்தி இருக்கலாம். ஆனால், வேறொரு வகை நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தி அற்றவராக இருக்க நேரிடும். சான்றாக, ஒருவர் பெரியம்மை நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கலாம். ஆனால், டைபாய்டு நோய் எதிர்ப்பு சக்தியற்றவராக இருந்து அந்நோய்க்கு ஆளாகலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தி இரு வகைப்படும் முதலாவது இயற்கையாக அமைந்துள்ளது. இரண்டாவது செயற்கையாக உடலில் உண்டாக்கிக் கொள்வது. இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி பிறக்கும் போதே உடலில் ஏற்பட்டு நிலைபெறுவதாகும். மனிதர்களுக்கும் பிற விலங்கினங்களுக்கும் அடிக்கடி நோய் ஏற்படும். ஒன்றின் நோய் மற்ற உயிரினத்தைத் தாக்குவதும் உண்டு. எல்லா நோய்களும் அவ்வாறு பற்றுவதில்லை. காரணம் அவற்றிற்கு இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே யாகும். சான்றாக, கிரந்தி நோய், குஷ்டம் போன்ற நோய்கள் விலங்குகளைப் பற்றுவதில்லை. காரணம், இந்நோய்களை எதிர்க்கும் சக்தி இயற்கையாகவே அவ்விலங்குகளிடம் இருப்பதேயாகும். அதே போன்று விலங்குகளுக்கு வெக்கை போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால், இத்தகைய நோய்கள்