பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்

231

வடிவமான மஞ்சள் நிறமுள்ள நுண் பொடியாகும். மலர்களில் நீண்ட பை போன்ற ஒன்றில் நிறைய மகரந்தப் பொடி இருக்கும்.

தன் மகரந்தச் சேர்கை

மகரந்தப் பை முற்றி வெடித்த பின் அப்பொடி மலர்ப் பகுதிகளில் பரவி ஒட்டிக் கொண்டிருக்கும். தன் மகரந்தச் சேர்க்கை மலரில் தேன் பருக வரும் வண்டுகள் தேனீக்களின் கால்களில் ஒட்டிக் கொண்டு, மலரில் உள்ள சூல் பகுதியைச் சென்றடையும். இவ்வாறு மகரந்தப் பொடித் துகள் சூல்பகுதியை அடைவதன் மூலமே காய் காய்க்கிறது. இதுவே மகரந்தச் சேர்க்கையாகும். பறவைகளும் காற்றும் ஓடும் நீரும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கைக்குத்துணைபுரியும் தேனீக்கள், வண்டுகள் மற்றும் பூச்சிகளை ஈர்க்கும் வகையில் மலர்களில் சுவைமிகு தேனும் வண்ண நிறமும் அமைந்துள்ளன.

அயல் மகரந்தச் சேர்க்கை

மகரந்தச் சேர்க்கை 'தன் மகரந்தச் சேர்க்கை', 'அயல் மகரந்தச் சேர்க்கை’ என இரு வழிகளில் நடைபெறுகிறது. ஒரு பூவில் உள்ள மகரந்தப் பொடியானது அதே பூவின் நடுப்பகுதியில் உள்ள சூலகத்தின் சூல் உறுப்பின் தலைப்பகுதியில் விழுந்தாலும் அல்லது அதே செடியின் வேறொரு பூவின் சூல்முடி மீது விழுந்தாலும் அது தன் மகரந்தச் சேர்க்கையாகும். ஒரு செடியில் உள்ள பூவின் மகரந்தத் தூள் அதே இனத்தைச் சார்ந்த வேறொரு செடிப் பூவின் சூல்முடியில் மகரந்தப் பொடி விழுந்தால் அது அயல் மகரந்தச் சேர்க்கையாகும். இருவிதமான மகரந்தச் சேர்க்கைகளிலும் அயல் மகரந்தச் சேர்க்கையே சிறந்ததாகும். இதன்மூலம் நல்ல பயன் கிடைக்கும்.

தென்னை போன்ற மரங்களிடையேயும் நெல், கம்பு போன்ற பயிர்களிடையேயும் மகரந்தச் சேர்க்கை ஏற்பட காற்று துணை புரிகிறது. நீர்த் தாவரங்களிடையே மகரந்தச் சேர்க்கை ஓடும் நீர் மூலமே ஏற்படுகிறது.


மண் : (Soil) பூமி மட்டும் மண்ணால் மூடப்படாமல் இருந்திருந்தால் மனிதன் என்றோ அழிந்து, இல்லாமலே போயிருப்பான் . மண் இல்லையென்றால் தாவர வளர்ச்சியில்லை. அதனால் உணவு உற்பத்தியில்லை. மனித இனமோ விலங்கினமோ பறவையினமோ உணவின்றி வாழ வாய்ப்பே இல்லை. எனவே, அனைத்துயிர்களும் வாழ மண் அடிப்படைத் தேவையாக அமைந்துள்ளது.

தாவரப் பயிர்கள் செழித்து வளர மிருதுவான மண் தேவை. இம் மண் பாறைத் தூள்களும் இறந்த உயிர்கள், மரம் செடி கொடிகள் முதலான தாவரங்கள், மடிந்த விலங்குகள் ஆகியன மக்குவதால் உண்டாகின்றன . காணப்படும் சிறு கற்கள் அல்லது பொடி மணல்கள் ஒரு காலத்தில் பெரும்பாறைப் பகுதிகளாக இருந்தவைகளாகும். உடைக்க முடியாத பாறைகள் என்று உலகில் எதுவும் இல்லை. பல வகைகளில் பாறைகள் தூளாகின்றன. பாறைகள் உடைந்து சிதற வெப்பம் ஒரு காரணமாகும். அதிக வெப்பமும் அதிகக் குளிர்ச்சியும் பாறைகளில் வெடிப்புகளை உண்டாக்க ஏதுவாகின்றன. அந்தப் பாறை வெடிப்புகளில் பறவைகள் மூலம் தாவர விதைகள் விழுந்து, அதன் மூலம் செடி முளைத்து மரமாகும்போது பாறைப் பிளவுகள் சிதறி சிறு துண்டுகளாகின்றன. இத்துண்டுகள் மழை நீரில் உருட்டிச் செல்லும்போது ஏற்படும் உராய்வினால் தேய்ந்து சிறு சிறு மணல்களாகவும் பின்பு மிகச் சிறிய துணுக்குகளாகவும் உருமாறுகின்றன. அழிந்த தாவரங்கள் விலங்குகளின் பாக்டீரியாக்களால் நன்கு மக்கி மண்ணோடு கலக்க மண் நல்ல வளமுடையதாக ஆகிறது.