பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்கலங்கள்

239

யும் தாவர மிதவை உயிர்களாகும்.

கண்ணுக்குப் புலனாகாத, நுண்பெருக்காடி மூலம் காணக்கூடிய மிதவைத் தாவரங்களே

மிதவை உயிரினங்கள்

மிக அதிகமாக உள்ளன. இவற்றில் ஓரணுத் தாவரங்களான ஆல்காக்கள் எனும் பாசியினங்களே மிக அதிகமாகும்.

தாவர வகைகளைப் போன்றே நீரில் மிதந்து வாழும் பிராணி இனங்களும் பல உண்டு. இவற்றிலும் ஓரணு உயிரினங்கள் உண்டு. மற்றும் கடல் புழுக்கள், மீன்பேன், சாமந்தி, நீர்த்தெள்ளு, ஜெல்லிமீன், ஈர்க்கு இறால், நண்டு, இறால் மற்றும் மெல்லுடலையுடைய மீன்கள், கடல் வெள்ளரி போன்றவை மிதவைப் பிராணிகளாகும். இவை நீர்ப்பரப்பின் மீது சுற்றித் திரிந்து வாழ்கின்றன. மீன் முட்டைகளும் அவற்றின் ஆரம்ப நிலை லார்வா குஞ்சுகளும் கூட மிதவை உயிர்களேயாகும். இவற்றிற்கு ஓரணுத் தாவர வகைகளும் புழுக்களும் உணவாயமைகின்றன.

மிதவைத் தாவரங்களை மிதவைப் பிராணிகள் உண்டு வாழ்கின்றன. அதே போன்று மிதவைப் பிராணிகளைப் பெரிய மீன்கள் தின்று வளர்கின்றன. இவற்றை மனிதர்கள் பிடித்து உணவாகக் கொள்கின்றனர். இவ்வாறு உணவுப் பொருட்களுக்கு மிதவை உயிர்கள் அடிப்படையாக அமைகின்றன எனலாம்.


மின்கலங்கள் : வேதியியல் மாற்றங்களால் மின் சக்தி உண்டாக்கும் கலங்கள் 'மின் கலங்கள்' என அழைக்கப்படுகின்றன. மின் கலங்கள் சாதாரணமாக பிரதம மின்கலம், துணை மின்கலம் என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் பிரதம மின்கலத்தில் உள்ள வேதிப் பொருட்களை அடிக்கடி மாற்றி புதுப்பிக்க வேண்டியிருக்கும். இவ்வகையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மின்கலம் 'வோல்ட்டா மின்கலம்’ ஆகும். இதனை 1799ஆம் ஆண்டில் வோல்ட்டா எனும் இத்தாலிய அறிவியலறிஞர் கண்டுபிடித்தார்.